கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனுக்கும் இடையில் இன்று (27) சந்திப்பொன்று இடம் பெற்றது.
குறித்த சந்திப்பானது மட்டக்களப்பில் உள்ள ஆளுனரின் வாசஸ்தலத்தில் வைத்து இடம் பெற்றது.
மட்டக்களப்பு நகர அபிவிருத்தி,சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பிலும் எதிர் வரும் தைப் பொங்கல் தினத்தை விசேடமாக மட்டக்களப்பில் கிழக்கின் பாரிய கொண்டாட்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கிழக்கு ஆளுனருக்கு மாநகர மேயர் எடுத்துக் கூறியுள்ளார்.
பிரதானமான கலாசார மண்டபம் அமைத்தல் மற்றும் நூலகம் அமைத்தல் தொடர்பான விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக கிழக்கின் அபிவிருத்தியில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல பூரணமான ஒத்துழைப்புக்களை தற்போதும் எதிர்காலத்திலும் வழங்கவுள்ளதாக கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆளுனர் மேலும் கூறினார்.
இச் சந்திப்பில் ஆளுனரின் உதவிச் செயலாளர் உதயகுமார் சிவா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் மாகாண சுற்றுலா துறை பணியக பணிப்பாளரும் ஆளுனரின் ஊடகச் செயலாளருமான ஹஸன் அலால்தீன் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர்.