உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டம்


ரு உள்ளூராட்சி மன்றத்தின் குறிக்கோள்கள், கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயார் செய்தல், அவற்றை அமுல்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பிரதான கருவியாக வரவு செலவுத்திட்டம் உள்ளது.

மேலும் திட்டமிடல் செயற்பாட்டின் முன்னேற்றத்தை கண்காணிப்புச் செய்து வித்தியாசங்களை கட்டுப்படுத்துவதற்குவுள்ள வினைத்திறன்மிக்க நிதி முகாமைத்துவ ஆவணமாகவும் வருடாந்த வரவு செலவுத் திட்டமே பயன்படுகின்றது.
குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களை அமைத்துருவாக்கும் சட்டங்களுக்கு அமைய வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வதானது, சட்ட ரீதியான தேவைப்பாடாகுமென்பதுடன் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது கவனமாகவும் சரியாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கவாறும், அமுல்படுத்தக்கூடிய வகையிலும், மக்களின் பங்கேற்பு உபாய முறைகளின் அடிப்படையில் தயார் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

அதற்கமைய மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 211 முதல் 217 வரையான பிரிவுகளின் மூலமும், நகர சபைகள் கட்;டளைச் சட்டத்தின் 178 (1) முதல் 179 வரையான பிரிவுகளின் மூலமும், பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவினதும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சட்டத் தேவைப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் தயார் செய்கின்ற வரவு செலவுத் திட்டமானது முறையான நிதி முகாமைத்துவமின்றி தயார் செய்யப்படுகின்ற வெறும் ஆவணமாக மாத்திரம் உள்ளதுடன் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சளவில் நிறைவேற்றக் கூடியவாறு இது தயார் செய்யப்படுவதாகத் தெரியவில்லை.

அது மட்டுமன்றி, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திட்டமிடப்படாத செலவினங்களைச் செய்வதனாலும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொகைகளையும் தாண்டி செலவினங்களைச் செய்வதனாலும் கணக்காய்வு வினாக்களுக்கு உட்பட முடியும்.

உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சிபார்சுகள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான பங்கேற்புத் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத்திட்டத்தை தயார் செய்வது பற்றிய வழிகாட்டல் தொகுப்பு, 2009 டிசம்பர் 18 ஆம் திகதிய 1632ஃ26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய உள்ளூராட்சிக் கொள்கைக்கு அமைய தயார் செய்யப்பட வேண்டும்.

எனவே வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போதும், வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாட்டின் போதும் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
01 வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது கிராம மட்டத்தில் அல்லது வட்டார மட்டத்தில் பிரேரணைகளைப் பெற்றுக் கொள்ளல்.

02 வருமானம் மற்றும் செலவினத்தை மதிப்பீடு செய்யும் போது யாதாயினுமொரு விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் தரவுகளைக் கணிப்பிடுகின்ற மரபுரீதியான முறையிலிருந்து விடுபட்டு உண்மையான வருமானம் மற்றும் செலவினங்களைக் கணிப்பிடுதல் வேண்டும். மேலும் வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்யும் செயற்பாட்டின் வெற்றிகரமான தன்மையை இலகுபடுத்துவதற்காக வருமான மதிப்பீடுகளைத் தயார் செய்வதை முதலிலும், செலவின மதிப்பீடுகளைத் தயார் செய்வதை அதன் பின்னரும் மேற்கொள்ளல் வேண்டும். முதலில் செலவின மதிப்பீடுகளைத் தயார் செய்து அதற்குப் பொருத்தமானவாறு தவறாக வருமானத்தை அதிகரித்துக் காட்டி வருமான மதிப்பீடுகளைத் தயார் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

03 உள்ளூராட்சி மன்றங்களின் மொத்த வருமானத்தில் 60மூஐ மீண்டுவரும் செலவினங்களுக்குப் பயன்படுத்துவதும், அவற்றில் 50மூ ஐ வீதிகள், கட்டடங்கள் மற்றும் நிலையான சொத்துக்களின் புதுப்பித்தல்கள் மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்குவதற்கும், சபையின் சுயஉருவாக்க வருமானத்தில் ஆகக் குறைந்தது 20மூ ஐ பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒதுக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

04 வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் குறிப்பிட்டதொரு விகிதத்தை இளைஞர் அபிவிருத்திக்கும், பயிற்றுவிப்புகளுக்கும், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும், மந்தபோசனையை ஒழிப்பதற்கும் பயன்படுத்தல்.

05 வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் செயற்பாட்டில் சமுதாய சேவைகளை வழங்கும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

*ஆற்றப்படுகின்ற சேவைகளைத் தற்போதிலும் பார்க்க எவ்வாறு வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்?

*சேவைகளின் தரத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

*தற்போது ஆற்றப்படுகின்ற சேவைகளில் விஸ்தரிக்க வேண்டிய சேவைகள் உள்ளனவா?

*தற்போது சபையினால் ஆற்றப்படுகின்ற சேவைகளில், அச்சேவைகளை நுகர்வோரிடமிருந்து கட்டணம் அறவிட்டுக் கொண்டு தனியார் துறையினால் ஆற்றக்கூடிய சேவைகள் உள்ளனவா?

போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

06 வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது மக்களின் பங்கேற்பை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுடன், வரவு செலவுத்திட்ட செயல்ரீதியான திட்டத்தையும் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது பிரதேச மக்களின் சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் உதவி மற்றும் பங்கேற்பைப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமாகும். இந்த உதவியையும், பங்கேற்பையும் பல்வேறு வழிமுறைகளில் பெற்றுக் கொள்ள முடியும். சபையினால் வரவு செலவுத்திட்டக் கொள்கை தீர்மானிக்கப்பட முன்னர் வரவு செலவுத்திட்டம் மற்றும் சேவைகள் பற்றிய மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கோர முடியும்.

வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்யும் போது மக்களின் பங்கேற்புடன் அதனைத் தயார் செய்வதன் தேவை மற்றும் முக்கியத்துவம் தொடர்பாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல் பொருத்தமானதாகும்.

07 வரவு செலவுத்திட்டத்திற்கு சமூகத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் போது உத்தேச ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள மொத்த வருமானம் எவ்வளவு என்பது தொடர்பான பருமட்டான மதிப்பீட்டைச் செய்து கொள்வது மிகவும் பொருத்தமானதாகுமென்பதுடன், மேற்படி மதிப்பிடப்பட்ட வருமானம் தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதன் மூலம் மக்கள் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் மற்றும் கருத்துக்களை செயல்ரீதியாக அமுல்படுத்துவதை இது இலகுபடுத்தும்;.

08 உள்ளூராட்சி மன்ற வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்வது தொடர்பாக உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய ஆணைக்குழுவினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள பின்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு அமைய வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்வது சிறந்ததாகும்.

பணி – இலக்குத் திகதி – பொறுப்பு

01. வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வது பற்றிய அறிவுரைகளைத் தயார் செய்து வெளியிடல் – ஏப்ரல் (15) – நகர ஆணையாளர்/செயலாளர்

02. வட்டாரக் குழுக்களில் பிரேரணைகளைச் சமர்ப்பித்தல்- ஜுன் (30)- வட்டாரக்குழு

03. வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றி அவ்வவ் பிரிவுகளின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் – ஜுன் (30) – பிரிவுத் தலைவர்கள்

04. ஆரம்ப மதிப்பீடுகளைத் தயார் செய்தல்- ஜுலை( 15) – கணக்காளர் /கணக்குப் பதியுனர் /வரவு செலவுத் திட்ட அலுவலர்கள்

05.நிலையான குழுக்களின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளல் – ஜுலை (31) – நகர ஆணையாளர் /செயலாளர்

06.நகர முதல்வர்/தவிசாளரின் மீளாய்வு -ஆகஸ்ட் (15) -நகர முதல்வர் /தவிசாளர்

07.வரவு செலவுத் திட்டக் கொள்கையைத் தீர்மானிப்பதும், சபையில் சமர்ப்பிப்பதும். – ஆகஸ்ட் (31) – நகர முதல்வர் /தவிசாளர்

08.பிரிவுகளின் அடிப்படையிலான வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்தல் – செப்தம்பர்(30) – பிரிவுத் தலைவர்கள்

09.இறுதி வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயார் செய்வதும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தை வரைவு செய்வதும். – அக்டோபர்(31 – கணக்காளர் /கணக்குப் பதியுனர் /வரவு செலவுத் திட்ட அலுவலர்கள்

10.நிதி நிலையியல் குழுவினால் வரைவு வரவு செலவுத் திட்டம் ஆராயப்படுதல் – நவம்பர் (15) – நகர ஆணையாளர் /செயலாளர்

11.வரவு செலவுத் திட்டச் செய்தியைத் தயார் செய்தல் – நவம்பர் ( 20) – நகர முதல்வர் /தவிசாளர்

12.வரைவு வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தல் – நவம்பர் ( 30) – நகர முதல்வர் /தவிசாளர்

13.தேவையாயின் திருத்திய வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது முறை சபையில் சமர்ப்பித்தல் – டிசம்பர்( 15) – நகர முதல்வர் /தவிசாளர்

14.வரைவு வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் – டிசம்பர்( 15) – சபை

15.வரவு செலவுத் திட்ட ஆவணத்தை அச்சிட்டு விநியோகித்தல் – டிசம்பர்( 31) – நகர ஆணையாளர் /செயலாளர்

09.வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆண்டினுள் அதற்கமைய நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அத்தியாவசியமாகு மென்பதுடன், ஆண்டினுள் வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட வேண்டியது, யாதாயினும் தடுக்க முடியாத அத்தியாவசிய நடவடிக்கைகள் மாத்திரமாகுமென்பதுடன் அதற்கும் உடனடியாகத் தேவையான சபைத் தீர்மானங்களையும், குறைநிரப்பு மதிப்பீடுகளை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

10.வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படாதுள்ள யாதாயினுமொரு விடயத்தை அமுல்படுத்துவதற்கான குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது சபையின் நிலையான வைப்புகளுக்குப் பதிலாக முதலீடு செய்துள்ள நிதி வருமான மூலமொன்றல்ல என்பதையும் கவனத்தில கொள்ளல் வேண்டும்.

11.வரவு செலவுத் திட்டத்திலுள்ள வருமானங்கள் மற்றும் செலவினங்களை உண்மையான வருமானங்கள் மற்றும் செலவினங்களுடன் ஒப்பிட்டு வருமானங்கள் தொடர்பாக மாதாந்தமும் செலவினங்கள் தொடர்பாக மூன்று மாதங்களுக்கொரு முறையும் வரவு செலவுத் திட்டக் கண்காணிப்பை மேற்கொள்வதானது பயனுள்ளதாக அமையும்.

12.வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருமானங்களை உரிய ஆண்டினுள் உருவாக்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு சேகரிக்கப்படுகின்ற வருமானங்களுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

13.வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதனை முறையான முகாமைத்துவத்துடன், ஆண்டினுள் உரிய வகையில் அமுல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

எம்.ஐ.எம். வலீத் (B.A.)
ஆசியா மன்றம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -