- நாங்கள் அணைவரும் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்போம் - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு-
க.கிஷாந்தன்-பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ள கூட்டு ஒப்பந்த கைச்சாத்திலிருந்து இ.தொ.கா உள்ளிட்ட பெருந்தோட்ட கூட்டு கமிட்டி, மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியன வெளியேறி ஒரே மேசையில் அமர்ந்து அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தும் பட்சத்தில் நாங்களும் கைகோர்த்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும், அரசுக்கும் அழுத்தம் கொடுத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தேவையேற்படின் தற்போது பெற்றுள்ள அமைச்சு பதவியையும் துறக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவி வகித்த அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அவருக்கு அவரின் ஆதரவாளர்களால் அட்டன் நகரில் ஆலய வழிபாடும் பிரமாண்டமான வரவேற்பு பேரணியும் 23.12.2018 அன்று நடைபெற்றது.
இதன்போது இதில் கலந்துகொண்ட அமைச்சர் அட்டன் நகரின் மத்தியில் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட்டு புதிய அரசொன்றை உருவாக்கினார். ஆனால் அனைத்து கட்சிகளும் நீதிமன்றத்தை நாடியதினால் எமக்கு நீதி கிடைத்தது. அதனால் மீண்டும் எமது ஐ.தே.கா அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த இடைக்காலத்தில் இரண்டு மாத காலம் பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயல்பட்டவர்கள் ஆடிய ஆட்டத்தை மக்கள் அறிவார்கள்.
நியாயம் எப்பக்கம் இருக்கின்றதோ அங்கு திகா, மனோ, திலகர் ஆகியோர் உறுதியாக நின்றோம். இன்று விட்டு சென்ற அமைச்சும் அந்தஸ்த்தும் மீண்டும் கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாம் செய்த அபிவிருத்திகள் யாவும் தடைபட்டுள்ளது. அதனை மிக வேகமாக அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.
இதுவரை வீடுகள் அமைத்து வந்தோம் இப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய திகாஇ திலகர்இ உதயா ஆகியோர் தயாராக உள்ளோம் என்றார்.
அதேவேளையில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அட்டன் நகரசபைக்கு போட்டியிட்ட எமக்கு மக்கள் ஆதரவு பலமாக அமைந்தது. நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் அட்டன் நகர அபிவிருத்தியில் இங்கு பிரதான வீதிகள் காபட் முறையில் செப்பணிடப்படும் எனவும் உறுதியளித்தார்.