முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-
சீயாக்கள் என்பதனால் ஈரானை எதிர்க்கும் அரச குடும்பம், ஈராக்கில் சீயாக்களையே ஆட்சியில் அமர்த்தியது ஏன் ?
எண்ணை வள சுரண்டல்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்காத அரசாங்கங்களையும், தனக்கு சவாலாக உள்ள தலைவர்களையும், இராணுவ பலம் உள்ள தேசங்களையும், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற இஸ்லாமிய நாடுகளையும் அழித்து நாசம் பண்ணுவதில் அமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் கவனமாக உள்ளார்கள்.
இவ்வாறான செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக ஏதாவது காரணங்களை கூறி உலகை நம்பவைப்பார்கள். இதற்காக பிரபலம்வாய்ந்த சர்வதேச முன்னணி ஊடகங்கள் பாரிய பங்களிப்பினை செய்கின்றது.
அதுபோல் அமெரிக்காவின் இந்த செயல்பாடுகளுக்கு சவூதி அரச குடும்பமும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்பது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் அரச குடும்பத்துக்கு எதிரான எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.
இங்கே ஒரு விடயத்தை நாங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது சீயாக்கள் என்று கூறி, ஈரானை தனிமைப்படுத்திய அரபு நாடுகள், ஈராக்கில் சுன்னிப்பிரிவை சேர்ந்த சதாமை அழித்துவிட்டு அதே சீயா பிரிவை சேர்ந்தவர்களையே ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
இவ்வாறான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இவர்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. பிரமாண்டமான படை நடவடிக்கைகளுடன், பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துதான் சதாமை ஆட்சி கவிழ்ப்பு செய்தார்கள்.
ஈரானில் சீயா பிரிவை சேர்ந்த ஆட்சியாளர்களை இஸ்லாத்தின் விரோதிகள் என்று பிரச்சாரம் செய்யும் அரபுலகம், ஈராக்கில் அதே சீயாக்களின் ஆட்சியை இஸ்லாத்தின் காவலர்களாக அங்கீகரித்ததுள்ளதுடன், ஆதரவும் வழங்கிவருகின்றது.
ஈராக்கில் நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த சுன்னி பிரிவை சேர்ந்த சதாமை ஆட்சியிலிருந்து அகற்றினால், அதற்கு மாற்றீடாக அதே சுன்னி பிரிவை சேர்ந்த ஆட்சியாளர்களை ஈராக்கின் ஆட்சிபீடத்தில் அமர்த்த முயற்சிக்கவில்லை.
1979 இல் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் வரைக்கும், அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசாங்கமே ஆட்சி செய்தது. அவர்களும் சீயா பிரிவை சேர்ந்தவர்கள்தான். அப்போது சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் பலமான உறவுகள் இருந்தது.
ஆனால் 1979 இல் இஸ்லாமிய புரட்சியின் பின்பு, ஈரானின் புரட்சி தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்கள் உலக இஸ்லாமிய நாடுகளுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதாவது மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த அறைகூவலாகும்.
அதன்பின்பு ஈரானுடன் நேரடியாக மோதுவதற்கு துணிவில்லாத அரபு நாடுகள், ஈரானை பலயீனப்படுத்துவதற்காக சதாமை தூண்டிவிட்டு நீண்டகால ஈரான்–ஈராக் மோதலுக்கு வழிவகுத்தார்கள்.
அரபுலகத்தின் எதிர்பார்ப்புக்கு மாற்றமான அந்த யுத்தத்தின் மூலம் இராணுவரீதியில் ஈரான் பலமடைந்ததுடன், ஈராக்கும் யுத்த அனுபவங்களை பெற்றது.
அமெரிக்காவும், அரபுலகமும் சேர்ந்து ஏராளமான நிதி மற்றும் ஆயுத உதவிகளை ஈராக்குக்கு வழங்கியிருந்தும், 1980 தொடக்கம்1988 வரைக்குமான எட்டு வருட ஈரான்-ஈராக் யுத்தத்தில் இவர்களால் ஈரானை தோற்கடிக்க முடியவில்லை.
அதில் தோல்வியடைந்த அரபுலகமும், அமெரிக்காவும் ஈரானை தனிமைப்படுத்துவதற்காக சீயா என்ற பிரச்சாரத்தினை கையிலெடுத்தது. இறுதியில் அதுவே அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது.
இங்கே சீயா மற்றும் சுன்னி என்ற பிரச்சாரங்கலானது மத்தியகிழக்கின் பிராந்திய வல்லாதிக்க சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், வல்லாதிக்க சக்தியாக இருக்கின்ற ஈரான் நாட்டை ஓரம்கட்டுவதற்குமான அரசியல் நோக்கங்களே அன்றி வேறு ஒன்றுமில்லை.
சில நேரங்களில் அரபு நாடுகளைவிட இராணுவ ரீதியில் பலயீனமாகவும், முதுகெலும்பில்லாத தலைவர்களும் இருந்திருந்தால் இன்று அமெரிக்காவினதும், சவூதியினதும் நட்பு நாடாக ஈரான் இருந்திருக்கும். இதனால் சீயாக்கள் என்ற பிரச்சினைகளே இருந்திருக்காது.
தொடரும்...