ஐ. ஏ. காதிர் கான்-
இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு புதிய கிரிக்கெட் சபைத் தெரிவுக்கான தேர்தல் மார்ச் மாதம் அளவில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதன் இடைக்காலத் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மாஹானாம நியமிக்கப்படவுள்ளதாக, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ அறிவித்துள்ளார்.
இது தவிர, இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி. சில்வா ஆகியோரால் வழங்கப்பட்ட அறிக்கை உதாசீனம் செய்யப்பட்டதாகவும், மறுபடியும் அவ்வாறு இடம்பெறுவதற்கு தான் விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மூவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ரொஷான் மஹானாம ICC உடன் இணைந்து பணியாற்றியவர். இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, க்ரேம் லப்ரோய் தலைமையிலான கிரிக்கெட் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, அசந்த டி. மெல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு, கடந்த நவம்பர் மாதமே புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், சிதத் வெத்தமுனி தலைமையிலான புதிய தேர்வுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ICC யின் பிரதிநிதிகளை, தான் சந்திக்கவுள்ளதாகவும், ICC யின் ஊழல் தடுப்புப் பிரிவை இலங்கையிலிருந்து செயற்பட அழைப்பு விடுக்கவுள்ளதாகவும்,
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.