திருகோணமலை கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் இன்று (25) கிண்ணியா நகரசபையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடகாலமாக கிண்ணியா பாலம் இருளில் மூழ்கிய நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனை அடுத்து நகர திட்டமிடல் அமைச்சின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா பாலத்தை ஒளிமயமாக மாற்றும் நடவடிக்கையில் கிண்ணியா நகரசபை ஈடுபட்டுள்ளது.
கிண்ணியா பாலத்திற்கான வீதி மின் விளக்குகளை இன்று கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச். எம். நளீம் மற்றும் உபதவிசாளர் ஐயூப் சப்ரின் ஆகியோர்கள் ஆரம்பித்து வைத்தனர்.
கிண்ணியாவை ஒளிமயமாக்கும் திட்டத்தின் கீழ் எம்.எஸ். தௌபீக் எம்பியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதேவேளை திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி கிண்ணியா பாலம் தொடக்கம் உப்பாறு பாலம் வரை ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
இதேவேளை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட எட்டு வட்டார தொகுதிகளிலும் வீதி மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒளிமயமான கிண்ணியா வாக மாற்ற பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் நகர சபையின் தவிசாளர் எஸ். எச். எம். நளீம் மேலும் தெரிவித்தார்.