மாணவர்கள் மத்தியில் கல்வி அறிவையும் அதன் வளர்ச்சியையும் அதிகப்படுத்த வேண்டுமாகவிருந்தால் அவர்களின் ஆரம்பக் கல்வியிலிருந்தே பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் 26 வது மாணவர் வெளியேற்று விழாவும் மாணவர்களின் கலை நிகழ்வும் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
இந்தப் பிரதேசத்தின் கல்வி விடயத்தில் அதிகமதிகம் எங்களுடைய அரசியல் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். எங்களுக்கும் கல்வி விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆகவே பெற்றார்களும், ஆசிரியர்களும் மாணவச் சமூகத்தை கல்வியின்பால் இட்டுச் செல்வதற்கும், அவர்கள் கல்வியை ஆர்வத்தோடு கற்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும்.
அத்தோடு பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் இப்போதிருந்தே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறையாவது அவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகள் தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.