எதிர்காலத்தில் எமது சமூகத்தின் அனைத்துவிதமான விடயங்களையும் உயர்த்துவதாகவிருந்தால் அல்லாஹ்வின் உதவியால் அது அரசியல் பலத்தால் மாத்திரம்தான் முடியும் என்று மீராவோடை மேற்கு அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் தெரிவித்தார்.
மீராவோடை மேற்கில் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையம் (21) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சம காலத்தில் கல்குடாவின் அரசியல் அபிவிருத்தியில் எங்களுடைய அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ளார் அதனைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.
எனவே இப்பகுதிக்கு தொடர்ந்தும் அபிவிருத்திகள் கிடைக்க வேண்டுமாகவிருந்தால் எமது பிரதேசத்திலிருக்கின்ற நாம் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை நாம் பலப்படுத்த வேண்டும், எமது கல்குடா அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு நாங்கள் செயற்படுவோம் என்றால்தான் எதிர்காலத்திலும் எமது பிரதேசம் இன்னுமின்னும் அபிவிருத்தியில் ஜொலிக்கும் என்றார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அல்தாப் அமீர் அலி, மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார், செம்மண்ணோடை வட்டாரத்தின் அமைப்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீம் ஆசிரியர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்குடா மத்திய குழு இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஈ.எல்.மஃறூப் ஹாஜியார் மற்றும் மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்கத்தின் தவிசாளர் ஏ.ஜீ.றபீக், மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முன்னாள் பேஷ் இமாம் ஏ.எம்.யாகூப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.