ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமைத்துவம் மற்றும் ஆசிர்வாதத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டலின் கீழும் சுகாதார, போசனண மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்னவின் ஆசிர்வாதத்துடன்
நிந்தவூர் வௌவால்லோடையில் சுமார் 25 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர்
மாவட்ட ஆயுர்வேத வைத்தியாலையின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளன.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும், குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் புதிய வைத்தியாலைக் கட்டிடத் திறப்பு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைத்து அன்றைய தினமே பொதுமக்கள் பாவனைக்கும் கையளிக்கப்படவுள்ளது.
இந்த மாபெரும் திறப்பு விழாவுக்கு சுகாதார, போசனண மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுத்தீன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு சபை உறுப்பினர்கள், வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.