ஞானசாரவை விடுவிக்கும்படி 400 இந்துக்கோயில்கள் கடிதம் அனுப்பியுள்ளமை மூலம் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமாதானமாக வாழும் மனோநிலை ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஞானசாரவின் விடுதலைக்காக இந்து கோயில்கள் சிபாரிசு கடிதம் எழுதியுள்ளமை மூலம் நாட்டின் போக்கில் பல மாற்றம் ஏற்பட்டு வருவதை காட்டுகிறது. இது சமாதானத்தின் எதிரொலியா அச்சத்தின் எதிரொலியா என்று தெரியாத போதும் நாட்டின் எதிர்காலத்துக்கு இவ்வாறு மத தலைவர்கள் மத்தியிலான ஐக்கியம் இன்றியமையாதது. அத்துடன் இந்நடவடிக்கை முஸ்லிம்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஞானசார என்பவர் 2009 வரை தமிழ் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர். புலிகளை கடுமையாக சாடியவர். 2009ம் ஆண்டு உலமா கட்சியும் ஞானசாரவும் சேர்ந்து கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் புலிகளுக்கெதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவே புலிகளுக்கெதிராக கொழும்பில் நடந்த இறுதி ஆர்ப்பாட்டமாகும்.
இவ்வாறு தமிழீழ போராட்டத்துக்கெதிராக களத்தில் நின்ற ஞானசாரவுக்கு ஆதரவாக இந்துக்கோயில்கள் கடிதம் எழுதியுள்ளன என்றால் அதனை மிக இலகுவாக புறந்தள்ள முடியாது. இந்த நிலைக்கு இந்துக்கோயில்களை மாற்றியமைத்த சக்தி எது?
முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களுக்கு ஞானசாரவை 2012ம் ஆண்டுக்கு பின்னரே தெரியும். ஹலால் பிரச்சினையில் அவர் ஹீரோ ஆனார். பல சிங்கள இளைஞர் மத்தியில் இனவாதம் பெருக காரணமானார். இதன் காரணமாக முஸ்லிம்கள் மிக கடுமையாக அவரை வெறுத்தனர் என்பது உண்மை. இன்னமும் கூட முஸ்லிம்கள் ஞானசாரவுடன் நெருங்குவதற்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத நிலையில் வரலாற்றில் நேருக்கு நேர் ஆயுதம் தூக்கி சண்டையிட்ட, பௌத்த குருமாரையும் கொலை செய்த தமிழ் போராளிகளை பிரதிநிதித்துவ படுத்தும் இந்துக்கோயில்கள் ஞானசாரவுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளன என்றால் என்ன காரணம்?
இந்துக்கோயில்களின் இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் பரவலாக எதிர்க்கவுமில்லை.
என்ன காரணம்?
ஞானசார மூலம் தமது உரிமைகளை வெல்லலாம் என தமிழ் மக்கள் நினைக்கின்றார்களா?
அல்லது எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால் ஞானசார முஸ்லிம் விரோதப்போக்குடையவர் என்பதால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என்பதால் அவரை நண்பர் ஆக்கிக்கொண்டனரா?
அல்லது ஞானசாரவுக்கு ஆதரவு தரும்படி புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் வேண்டிக்கொண்டனவா?
இந்தக்கேள்விகளுக்கான விடைகளை தேடுவது இன்றைய அவசிய தேவையாகும்.
இந்துக்கோயில்களின் பிரதிநிதிகளான தமிழ் போராளிகளை எதிர்த்த ஒருவருக்கு இந்துக்கோயில்கள் ஆதரவு தெரிவிப்பது இலேசுப்பட்ட விடயமல்ல. இது பற்றி முஸ்லிம்கள் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் ஆராய வேண்டும்.
ஒரு தனிநபர் மீது கொண்ட வெறுப்பு ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. நமது நல்ல செயல்களால் ஞானசார போன்றோரையும் வெல்லலாம் என்ற இஸ்லாமிய வழிகாட்டல் பற்றியும் சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்துக்கோயில்களின் ஞானசார ஆதரவு நமக்கு காட்டுகிறது என்றார்.