இதனால், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சை இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. தேசிய அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறிவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கே வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
எனினும், சபாநாயகரின் இந்த முடிவை ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன சவாலுக்குட்படுத்தின.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச மற்றும் அமைச்சரவையின் தலைவராக செயற்படும்போது அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கமுடியாது என்பதே மேற்படி கட்சிகளின் தர்க்கமாகும்.
இதுகுறித்து தனது இறுதி முடிவை சபாநாயகர் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிவிக்கவுள்ளார். அதன்பின்னரே எதிர்க்கட்சி தலைவர் பதவி சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, சேர் மார்க்ஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பவற்றை, எவரிடமும் ஒப்படைக்கப் போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், குறித்த அலுவலகமும் இல்லமும், எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளதாக, மகிந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐபிசி