கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2018ல் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (10) வியாழக்கிழமை கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹென் யூஜின், மெஸ்ரோ அமைப்பின் தலைவரும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவானுமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், மெஸ்ரோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். நஸ்மியா, கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி. ஹெரத், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநெத்தி, இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது முக்கியஸ்தகர் ஐ.எல்.எம். புர்கான் ஹாஜி, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், உயர்தர பிரிவு பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி பொறியியல் பீடத்திற்கு 10 பேரும் வைத்திய பீடத்திற்கு ஒருவருமாக 62 மாணவர்கள் பல்வேறு பீடங்களுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து தகுதிபெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலைக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை இராஜாங்க அமைச்சரின் பரிந்துரைக்கு அமைவாக தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.