மாணவர்களை பாடசாலை சீருடையுடன் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் என சிரேஷ்ட சட்டத்தரணி எப்.எம்.அமீறுல் அன்சார் மெளலானா தெரிவித்தார்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் பி.எம்.எம். வறுத்தீன் தலைமையில் பாடசாலை திறந்த வெளியில்(28) நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,
இங்கு மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு டெலஸ்கோப் கருவியை அன்பளிப்பு செய்துள்ளோம் ஏன் என்றால் இங்குள்ள மாணவர்கள் ஆகிய நீங்களும் வைத்தியர்களாக மற்றும் சமூகத்தில் உயர்ந்த பதவி நிலைகளை பெறுகின்ற கனவுகளோடு கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே.
மாணவர் பருவம் பெறுமதியானதாகும். மாணவர்களுடைய பணி கல்வி கற்பதாகும். ஆசிரியர் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதோடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று ஜனாதிபதி அவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையோடு தொடர்பானவர்களுக்கு கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
மாணவர்கள் பாடசாலை கதவுகள் ஊடாக பாடசாலைகளுக்கு வர வேண்டுமே தவிர நீதிமன்ற கதவுகள் ஊடக வரக்கூடாது. பாடசாலை சீருடையோடு கழுத்தில் டைகளையும் அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று மாணவர்களுக்கு சொல்லுமாறு நீதிபதி எங்களை கேட்டிருக்கிறார். அவ்வாறு வருபவர்களை குற்றவாளிக் கூட்டில் வைத்துத்தான் விசாரிக்கப்படும். பாடசாலையின் நற்பெயருக்கு மாணவர்களாகிய நீங்கள் களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது.
அண்மையில் கல்முனை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவன் ஒருவர் வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் இந்த நிலைமை மாணவர்களுக்கு தொடர்ந்தும் வரக் கூடாது என்றார்.
இந்த நிகழ்வில் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலைப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த 15 மாணவர்கள் வருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இதில்தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் உட்பட வைத்தியர்கள், தொழிலதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.