5முஸ்லிம்ஆசிரியைகளும் புதியபாடசாலைகளில் கடமையேற்பு!
காரைதீவு நிருபர் சகா-திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினை இசுருபாய கல்வியமைச்சின் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி கல்லூரியில் கற்பித்த 5 ஆசிரியைகளின் ஹபாயா ஆடை விவகாரம் கடந்தாண்டில் பிரச்சினையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் கிண்ணியா மற்றும் திருமலை சாஹிறா முஸ்லிம் வித்தியாலயங்களில் தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டனர்.
அவர்களது தற்காலிக இணைப்பு கடந்த 31.12.2018 உடன் நிறைவுக்குவருகிறது. அதாவது இந்த ஆண்டின் முதல்தவணையுடன் அவர்கள் மீண்டும் சண்முகாவிற்கு திரும்பவேண்டும்.
அதன்படி அவர்கள் கடந்த 2.1.2019அன்று பாடசாலையின் முதல்தவணை ஆரம்பமானதினத்தில் மீண்டும் சண்முகாவிற்குத் திரும்பினார்கள்.
அவ்வேளையில் சண்முகாவின் கல்விச்சமுகம் மீண்டும் கிழக்கு மாகாணக்கல்விப்பணிமனைக்குச்சென்று தமது ஆட்சேபங்களைத் தெரிவித்தது. போராட்டம் நடாத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
'இது தேசிய பாடசாலை எனவே மத்திய கல்வியமைச்சுதான் இதில் முடிவெடுக்கவேண்டும் அதுவரை பொறுமையாகவிருங்கள்' என மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்களிடம் கூறி அனுப்பிவைத்தார்.
அதேவேளை மத்திய கல்வியமைச்சிலிருந்து இதுவிடயம் தொடர்பாக மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு கடிதமொன்று வந்தது. அதில் இரு வழிமுறைகள் மூலம் குறித்த ஆசிரியையகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்தது.
ஒன்று அவர்கள் மாகாணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவித்தால் அவர்கள் விரும்பும் பாடசாலையில் இணைப்புச்செய்துவிட்டு தேசிய பாடசாலையிலிருந்து மாகாணப்பாடசாலைக்குச் செல்லும் படிவங்களை வழங்கி அதன்படி அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த இடமாற்றத்தை வழங்குதல்.
இரண்டு அவ்வாறு மாகாணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில்மாகாணப்பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் சம்பந்தப்பட்ட 5ஆசிரியையகளுக்கு இசுருபாய கல்வியமைச்சின் கடிதப்பிரகாரம் விருப்பம்கேட்டு கடிதங்களை அனுப்பிவைத்தார்.
அதற்கு அந்த 5ஆசிரியைகளில் ஒருவர் தான் மாகாணப்பாடசாலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். அவர்விருப்பப்படி அவர்கேட்ட கிண்ணியாவிற்கு அவர் இணைக்கப்பட்டுள்ளார். அவர் முறைப்படி தேசிய மாகாண பாடசாலை இடமாற்ற படிவங்களை அதிபர் வலயக்கல்விப்பணிப்பாளருடாக மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு வழங்கும் பட்சத்தில் இடமாற்றம் வழங்கப்படும்.
ஏனைய 4ஆசிரியைகளுள் ஒருவர் ஆரம்பநெறி ஆசிரியை இரண்டாமவர் விசேடகல்வி ஆசிரியை மூன்றாமவர் தகவல்தொழினுட்ப ஆசிரியை நான்காமவர் இரண்டாம்மொழி ஆசிரியை ஆவர்.
இவர்கள் நால்வரும் ஏலவே திருகோணமலை சாஹிறா மகாவித்தியாலயத்தில் இணைப்புச்செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. அங்கு ஆரம்பநெறி மற்றும் விசேடகல்வித்துறைக்கு வெற்றிடம் காணப்பட்டதனால் அவர்களில் இருவர் அங்கு இணைப்புச்செய்யப்பட்டார்கள்.
ஏனைய தகவல்தொழினுட்ப ஆசிரியை மற்றும் இரண்டாம் மொழி ஆசிரியைக்கு வெற்றிடம் நிலவுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் பட்டியலை திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளரிடம் கல்வித்திணைக்களம் கோரியபோது அவர் இருபாடசாலைகளை வழங்கினார்.
அதன்படி நிலாவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு தகவல்தொழினுட்ப ஆசிரியையும் குச்சவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டாம் மொழி ஆசிரியையும் இணைப்புச்செய்யப்பட்டனர்.
அதன்படி இந்த 5ஆசிரியைகளும் (21) திங்கட்கிழமை தத்தமது புதிய பாடசாலைகளில் கடமைகளைப்பொறுப்பேற்கவிருக்கின்றனர்.
இதுதொடர்பாக கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரைத் தொடர்புகொண்டு கேட்டபோது
'தேசிய பாடசாலைகளைப்பொறுத்தவரை நாம் இசுருபாயவின் முகவர்கள். இசுருபாய சொல்வதை நாம் செய்யவேண்டும். அதைமீறும் அதிகாரம் எமக்கில்லை. பொங்கலுக்கு லீவு வழங்கும் அதிகாரமும் அப்படியே. தேசியபாடசாலைகளுக்கு நாம் லீவு வழங்கமுடியாது.ஆதலால்தான் ஆளுநரின் உத்தரவிற்கமைவாக மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரம் லீவு வழங்கினோம்.
அப்படி சண்முகாவின் ஓர் உணர்வுரீதியான பிரச்சினையைத்தவிர்க்குமுகமாக மாணவர் நலன் மற்றும் கல்விச்சமுக நலன்கருதி இசுருபாய ஒரு தீர்மானத்தை எடுத்து அனுப்பும் போது நாம் அதன்படி செயற்படவேண்டியது எமது கட்டாய கடமையாகும். நான் ஓர் அரசாங்க ஊழியன். இதில் சாதி இனமத பேதம் பார்க்கமுடியாது. அதைமீறவும் முடியாது.அதனைத்தான் செய்தேனே தவிர எனது விருப்பிற்கு எதையும் செய்யவில்லை.செய்யவும் முடியாது' என்றார்.
எனவே இதுவிடயத்தில் யாரும் மாகாணகல்விப்பணிமனையையோ மாகாணக்கல்விப்பணிப்பாளரையோ குற்றம் சுமத்துவது அழகல்ல என்று கூறப்படுகிறது.