- காரைதீவில் கோடீஸ்வரன் எம்.பி முழக்கம்-
எஸ்.அஷ்ரப்கான்-தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும், இந்த தீர்வை பெறுகின்ற வரை பாராளுமன்றத்தில் மட்டும் அல்ல உலக நாடுகளில் மட்டும் அல்ல ஐக்கிய நாடுகள் வரை சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடி கொண்டே இருப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச மக்களின் தேவைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை செவிமடுக்கின்ற அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோடீஸ்வரன் எம். பியின் ஏற்பாட்டில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் எம். பியின் இணைப்பாளர் சுரேஸ்குமார் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு ஆலயங்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள், வைத்தியசாலை, சன சமூக நிலையங்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றின் தேவைகள், பிரச்சினைகள் ஆகியவற்றை செவிமடுத்த பிற்பாடு நிறைவாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு முக்கியமாக பேசியவை வருமாறு:-
2019 ஆம் ஆண்டு எங்களுக்கு சிறந்த வருடமாக் இருக்கின்றது. இந்த வருடத்திலே கூடுதலான அபிவிருத்தி திட்டங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ள கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்து உள்ளது. இந்த நாட்டின் அரசியலை தீர்மானிக்கின்ற கட்சியாக, இன்று ஆட்சி பீடத்தில் இருக்கின்ற ஐக்கிய தேசிய முன்னணியை நிலை நிறுத்துகின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இந்த கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவதிலும் பங்காளியாக கூட்டமைப்பு இருந்தது.
ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால் பிழையான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது எதிராக குரல் கொடுக்கின்ற கட்சியாகவும் தமிழ் கூட்டமைப்பு நிச்சயம் இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ, பொதுஜன பெரமுனவோ எதுவாக இருந்தாலும் அதன் ஆட்சியை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதை யாரும் மறுதலிக்க முடியாது. ஐக்கிய தேசிய முன்னணி தமிழர்களுக்கான தீர்வு திட்டங்களை, தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளை புறக்கணிக்குமானால் அதற்குரிய தகுந்த பதிலடியை கொடுத்து அவர்களை ஆட்சி பீடத்தில் இருந்து கீழே இறக்குவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயங்காது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக உள்ளது. தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய அமோக வாக்குகளே தென்னிலங்கை ஆட்சியை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டு வந்து உள்ளன.
இந்த நாட்டின் ஆட்சியை, சட்ட ஒழுங்கை, ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பை பேணுகின்ற விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடந்து உள்ளோம். கள்ளத்தனமாக பின் கதவால் ஆட்சிக்கு வந்தவர்களின் கொடூர ஆட்சியை தடுத்து நிறுத்தி உள்ளோம். ஆட்சி பீடத்துக்கு மறைமுகமாக ஏற நினைத்தவர்களை இறக்கி வைத்திருக்கின்றோம். அந்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழினத்துக்குமே சேரும். தமிழர்களுக்கான அரசியல் வரைபு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதை நிராகரிக்கின்றவர்களாக தமிழர்களாலே ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்த தரப்பினரும் உள்ளனர். எந்த நோக்கத்துக்காக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் கொண்டு வந்தார்களோ அந்த நோக்கத்துக்கு அவருடைய தரப்பினரே முட்டுக்கட்டை போடுகின்றனர்.
தமிழருக்கான தீர்வு திட்டத்தை வழங்கி தமிழ் மக்களுக்கு வேண்டியவற்றை செய்வார் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவருடைய கட்சியினரும் இன்று இத்தீர்வு திட்டத்தை நிராகரிப்பது தமிழ் மக்களுக்கு மாறாத மன வேதனையை தந்து உள்ளது. மஹிந்த ராஜபக்ஸவின் கொடூர ஆட்சியை முடிவுறுத்தி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பவே மைத்திரிபால சிறிசேன கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் இன்று மஹிந்த ராஜபக்ஸவுடன் கை கோர்த்து ஒன்றாக இருந்து செயற்படுவதும், எமக்கான தீர்வு திட்டத்தை நிராகரிப்பதும் உண்மையிலேயே மன வேதனையை தருகின்றது. அவர் எமது மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது.
தமிழ் மக்களோடு என்றும் பயணிப்பவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளார்கள். தீர்வு திட்டம் தொடர்பாக நாம் பல தரப்பட்ட நடவடிக்கைகளை, முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான ஒத்தாசைகளை தமிழ் மக்கள் தொடர்ந்து எமக்கு வழங்க வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும். இதை நாம் சரி வர நிறைவேற்றுவோம். தீர்வை பெறுகின்ற வரை தொடர்ந்து போராடுவோம். பாராளுமன்றத்தில் மட்டும் அல்ல உலக நாடுகளில் மட்டும் அல்ல ஐக்கிய நாடுகள் வரை சென்று போராடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
கடந்த அரசியல் நெருக்கடி காலத்தில் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுகின்ற படலங்கள் இடம்பெற்றன. 40, 50 கோடி ரூபாய் வரை விலை பேசினார்கள். அமைச்சு பதவி தருவதாக சொன்னார்கள். எனக்கும் சொன்னார்கள். எமது மக்களை விற்று நாங்கள் ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டோம் என்பதை முடிவாக சொல்லினோம். நான் இம்மாவட்ட மக்களை விற்று பிழைக்கின்ற தமிழனாக இருக்க மாட்டேன் என்பதை இந்த இடத்தில் நெஞ்சு நிமிர்த்தி கூறுகின்றேன்.