- சுதந்திர கட்சி அமைப்பாளர் ஆவேசம்-
எஸ்.அஷ்ரப்கான்-எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும்? என்பதை தீர்மானிக்கின்ற சக்தியாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பே உள்ளது என்று மார்பு தட்டி கொள்பவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்று கொடுக்கின்றார்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
எந்த பெருந்தேசிய கட்சியாக இருந்தாலும் சரி அந்த பெருந்தேசிய கட்சியை ஆட்சியில் ஏற்றவும், வீழ்த்தவும் கூடிய சக்தியாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது, நினைத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கு முழங்குகின்றார்கள். சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறுபான்மை மக்களின் கட்சிகளுக்கும் இவ்வாறான வாய்ப்பு கிடைப்பது என்பது மிக மிக அரிதான வரப்பிரசாதம் ஆகும். இதைத்தான் பேரம் பேசும் சக்தி என்றும் சொல்ல முடியும் . இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் ஆகியோர் இந்த பேரம் பேசும் சக்தியை வைத்து கொண்டுதான் அவர்களின் மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் பெருந்தேசிய கட்சிகளிடம் இருந்து பெற்று கொடுத்தார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டபோது அதில் சௌமியமூர்த்தி தொண்டமான் பங்கேற்று பேசிய வார்த்தைகளை நான் இங்கு சொல்லி காட்ட விரும்புகின்றேன். இந்த தொண்டமான் நடத்துவது கொச்சிக்காய் அரசியல், பெண்கள் எந்த கறி சமைப்பதாக இருந்தாலும் கொச்சிக்காய் இல்லாமல் எதுவும் சமைக்கவே முடியாது, அதே போல தென்னிலங்கை அரசாங்கம் எதுவாக இருந்தாலும் இந்த தொண்டமான் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினார். இவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் 21 வருடங்கள் ஆட்சியை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக இருந்து, அதன் மூலமாக மலையக மக்களுக்கு பெற்று கொடுக்க கூடியவற்றை எல்லாம் பெற்று கொடுத்தார். அதே போல பெரியசாமி சந்திரசேகரனின் ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தின் உதவியுடன்தான் 2001 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க முடிந்தது. இதன் மூலம் கிடைத்த பேரம் பேசும் சக்தியை சந்திரசேகரன் அவருடைய சமுதாயத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தினார். ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் பெருந்தலைவராக அஷ்ரப் முஸ்லிம் மக்களின் மனங்களில் இடம் பிடிக்க முடிந்ததும் இப்பேரம் பேசும் சக்தியை அவருடைய மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தியதாலேயே ஆகும். மலையக தமிழ் சமூகமும், முஸ்லிம் சகோதர இன சமூகமும் இவர்களுடைய தலைவர்களின் பேரம் பேசும் சக்தியின் மூலமாகவே அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் சமூகத்தை விட முன்னோக்கி சென்று உள்ளன. வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் உரிமை விடயத்தில் மாத்திரம் அன்றி அபிவிருத்தியிலும் பின்னடைந்தவர்களாகவே என்றும் இருந்து வருகின்றோம். ஆனால் பழம் பழுத்தால் வௌவால் வரும் என்று சொல்லி சொல்லியே தமிழ் தலைவர்கள் காலத்தை ஓட்டி மக்களை ஏமாற்றிய கதைதான் தொடர்கின்றது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் கிடைத்த மகத்தான சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பே தவற விட்டது. அரசியல் தீர்வு முயற்சியை பொறுத்த வரை இலங்கை - இந்திய ஒப்பந்தம் பொன்னான வாய்ப்பு ஆகும், மாகாண சபைகள் முறைமையை சரியாக பாதுகாத்து முன்னெடுக்க தமிழ் தலைமைகள் தவறி விட்டன. அதே போல தென்னிலங்கை அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்களுக்குள் சந்திரிகாவின் தீர்வு பொதியே தமிழ் மக்களுக்கான தீர்வை அதிக பட்சம் கொண்டிருந்தது. ஆனால் அந்த தீர்வு பொதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து சம்பந்தன் கம்பனி பாராளுன்றத்தில் எரித்தது. இந்த தீர்வு பொதி தமிழ் சட்ட வல்லுனர்களின் நேரடியான பங்களிப்புடனும், பங்கேற்புடனும் உருவாக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள்ளேயே சிறை பிடித்து வைத்திருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அமைப்புத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது பிதற்றுகின்றனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐ. தே. க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் நம்பவே இல்லை. புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் ரணில் ஒரு குள்ள நரி, அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை தரவே மாட்டார் என்று தீர்க்கமாகவும், தீர்க்கதரிசனமாகவும் சொல்லி இருக்கின்றார். ஆனால் புலிகளால் உருவாக்கப்பட்டதாக பெருமை பாடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்காகவே வெளிப்படையாக செயற்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு மிண்டு கொடுக்கின்றது. ஆனால் இதன் மூலமாக தமிழ் மக்களுக்கு என்று எதுவுமே கிடைப்பதாக இல்லை.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் மீட்சி, தமிழ் இளையோர்களுக்கான வேலை வாய்ப்பு, தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தி ஆகியவற்றில் ஒன்றைகூட தென்னிலங்கை அரசாங்கத்தின் தலை விதியை நிர்மாணிக்கின்ற சக்தியாக உள்ளது என்று இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் செய்து தர முடியாமல் உள்ளது என்பதே யதார்த்தமான வெட்கக்கேடு ஆகும். சம்பந்தர் கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கல்முனை தமிழ் மக்கள் முன்னிலைக்கு நேரில் வந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்று பகிரங்க வாக்குறுதி கொடுத்து விட்டு சென்றார். ஆயினும் கேவலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர இன்று வரை அவரால் முடியாமல்தான் உள்ளது. நாடு கேட்டு போராட இளையோர்களை தூண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களுக்கு வீடுகளைக்கூட பெற்று கொடுக்க முடியாத நிலைதான் தொடர்கின்றது. தமிழீழம் பெற்று தருவதாக உசுப்பேற்றியவர்களால் ஒரு தபால் அலுவலகத்தைக்கூட பெற்று தர முடியாமல் உள்ளது என்பதே உண்மை ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தபால் அலுவலகம் இல்லாத ஒரேயொரு பிரதேசமாக மாங்காடு கண் கண்ட சாட்சியாக உள்ளதை இந்த இடத்தில் சொல்லி வைக்கின்றேன்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தால் ஒழிய அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க வாக்குறுதி வழங்கி உள்ளார்கள். இவ்வாறான வாக்குறுதிகளை எல்லாம் வாக்கு வங்கிகளுக்காகவே இவர்கள் வழங்குகின்றார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமே அன்றி மாற்றமாக எதுவும் நடக்க போவதே இல்லை.