சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 14 வைத்தியசாலைகளுக்கு நோயாளர் காவுவண்டி (அம்புலன்ஸ்) வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நோயாளர் காவுவண்டி (அம்புலன்ஸ்) வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் (19) நிந்தவூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அம்புலன்ஸ் வண்டிகளை குறித்த வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளிடம் கையளித்தார். திருகோணமலை, மீறாவோடை, நிந்தவூர், இறக்காமம், அம்பாறை, மட்டக்களப்பு, பாணம, ஏறாவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டன.
பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர் போன்ற வைத்தியசாலைகளுக்கு சுமார் 1கோடி 80லட்சம் பெறுமதியான சகல வசதிகளையும் கொண்ட பென்ஸ் ரக அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், வைத்தியர்கள், சுகாதார உயர் அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், அமைச்சரின் இணைப்பாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு குறித்த அம்புலன்ஸ் வண்டியினை வழங்கிய அமைச்சருக்கும், அதற்காக உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் பொத்துவில் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.