முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை
எம்.ஜே.எம்.சஜீத்-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கம் நமது சமூகத்தின் மார்க்க கல்வி, ஆரம்ப கல்வி தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வருவதுடன். நமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற மனப்பாங்கில் செயற்பட வேண்டும் என்ற வேலைத்திட்டங்களை நீண்ட காலமாக செயற்படுத்தி வருகின்றனர் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய பாலமுனை கிளையின் ஏற்பாட்டில் பாலமுனை கோல்டன் கிட்ஸ் முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழா பாலமுனை இப்னு சீனா வித்தியாலயத்தில் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் மண்டபத்தில் பாலமுனை ஜமாஅத்தே இஸ்லாமிய கிளையின் செயலாளர் ஐ.எம்.றசீன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
நமது குடும்ப சூழலிலும், வீட்டுச் சூழலிலும் வாழ்ந்து வந்த நமது பிள்ளைகளை ஆரம்ப கல்வி பெறுவதற்காக முன்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றோம். நமது சின்னம் சிறு பிள்ளைகளை ஆளுமையுள்ளவர்களாக மாற்றி அவர்களின் எதிர்காலத்திற்கு அத்திவரமாக முன்பள்ளி ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். பெற்றோர்களாகிய நாமும் நமது பிள்ளைகளின் ஆரம்ப கல்வி விடயத்தில் கண்னும் கருத்துமாக செயல்பட வேண்டும்.
பாடசாலைகளில் இருந்து வந்து வீட்டுச்
சூழலில் வாழும் நமது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நமது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது பிள்ளைகளின் செயற்பாடுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார்கள் ஆகிய நமக்கு கிடைக்கிறது.
இங்கு உரையாற்றிய முக்கியஸ்தர்கள் போதைவஸ்த்து விடயங்கள் பாலமுனை பிரதேசத்தில் அதிகரித்து வருவதாகவும் இதனால் மாணவர்கள் விடயத்தில் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மிகவும் கவலையுடன் தெரிவித்தனர். இந்த விடயத்தில் முழு அம்பாரை மாவட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது. போதைவஸ்த்துப் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் நமது முஸ்லிம் பிராந்தியங்களில் விற்பனை செய்பவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தி தடை செய்வதற்கு அரசியல் அதிகாரம் பாவிக்கப்படுவது குறித்து நமது சமூகம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நமது முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள் போதைவஸ்த்து பாவனையில் ஈடுபடுவதாக அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். எனவே இந்த விடயத்தில் நமது பிரதேச முக்கியஸ்தர்களும், சமூக நலன் விரும்பிகளும் கவனம் செலுத்தி செயல் படவில்லை என்றால் நமது மாணவர்களின் எதிர்காலம் இருண்டதாக மாறி பல சவால்களுக்கு நமது முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்படும்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் இரண்டாயிரம் முன்பள்ளி பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. நாற்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்பள்ளி மாணவர்களும், நாலாயிரத்திற்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களும் அனுபவ ரீதியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி பாடசாலைகளும், முன்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் அதிகமான தொகையினர் அம்பாரை மாவட்டத்தில் தான்
உள்ளனர்.
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் நாம்
எல்லா இன மக்களுடனும் இன உறவுடனும், ஐக்கியத்துடன் எப்போதும் வாழவேண்டும். இன ஐக்கியத்திற்கு நமது முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
அண்மையில் அம்பாரையில் நமது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இன சுத்திகரிப்பு, திகனையில் ஏற்பட்ட இன சுத்திகரிப்பு சம்பவங்களில் இருந்து இன்றும் நமது சமூகம் மீளாத ஒரு நிலையில் மீண்டும் மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த செயற்பாடுகளின் பின்னால் சிங்கள- முஸ்லிம் சமூகங்களை மோதவிட்டு இன மோதலை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் நடை பெறுகிறது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்தித்து செயல் படவேண்டும்.
வட- கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றோம் என்பதனால் அவசரப்பட்டு நமது தீர்மானங்களை மேற்கொள்ள கூடாது இலங்கை முஸ்லிம்களின் 1/3 பங்கினர் தான் வட - கிழக்கு மாகாணங்களில் வாழ்த்து வருகின்றோம். 2/3 பங்கினர் வட - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சிங்கள மக்கள் மத்தியில் சிதறி வாழ்கின்றனர் என்பதை நாம்
மறந்து செயல்பட முடியாது வட - கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மேற்கொள்ளும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் வட - கிழக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்வி குறியாக்கி விட கூடாது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சபையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எம்.உபைத்துல்லா மற்றும் உயர் அதிகாரிகளும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.