திறந்த நீதிமன்றத்துக்குள் மது போதையில் வந்து அமர்ந்து ரகளை செய்த தகப்பன் ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் இவருக்கு இத்தண்டனையை வழங்கினார்.
இவருடைய மகன் போதை பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இந்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் போடப்பட்டு இருந்தார்.
தகப்பன் இவ்வழக்கை பார்வையிட வந்தபோதே சாட்சிகளாக ஆஜராகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஆசனத்தில் அமர்ந்தார். பார்வையாளர்களுக்கான ஆசனத்தில் சென்று அமருமாறு நீதிமன்ற பொலிஸார் பல தடவைகள் அறிவுறுத்தியபோதும் இவர் அனுசரிக்கவே இல்லை. இவர் மது போதையில் உள்ளார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய நீதிமன்ற பொலிஸாரால் இவருக்கு எதிராக உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதே நேரம் போதை பொருளை உடைமையில் வைத்திருந்த வழக்கில் இவருடைய மகன் குற்றத்தை ஒப்பு கொண்டார். இவருக்கு 06 மாத சாதாரண சிறை தண்டனை விதிக்கப்பட்டது.