நேற்று மனோகணேசனைச் சந்தித்துப்பேசிய கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ஷெங் சுயூயுவான் தனது தூதரகத்தின் அலுவலர்களும் சீனக் கோர்ப்பரேட் உயரதிகாரிகளும் இலங்கைக்கு வருகின்ற சீனர்களும் கூட தமிழைக் கற்கவிரும்பக்கூடும் என்று கூறியதுடன் அவ் விடயத்தில் அமைச்சின் உதவியை நாடுவதாகவும் குறிப்பிட்டார்.
சீனர்களுக்கு தமிழைக் கற்பிக்கும் நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதாக அமைச்சர் கணேசன் உடனடியாகவே தூதுவரிடம் தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனத் திட்டங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவித்தல்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சீனத் தூதுவரிடம் தெரியப்படுத்துவதற்காக அவரைச் சந்தித்த மனோகணேசன், நாட்டில் சிங்களம்,தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கின்ற அதேவேளை ஆங்கிலம் இணைப்புமொழியாக விளங்குகிறது. சகல பெயர்ப்பலகைகளிலும் அறிவிப்புகளிலும் மூன்று மொழிகளையும் பயன்படுத்தவேண்டியது கட்டாயம் என்று விளக்கமளித்தார்.
சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவித்தல்களில் தமிழ்மொழி இல்லாதிருப்பதற்காக வருத்தம் தெரிவித்த சீனதத் தூதுவர் அது வேண்டுமென்றே தமிழை அவமதிப்பதற்காக செய்யப்பட்டதல்ல. சீனமொழி போன்றே தமிழும் பழமைவாய்ந்தது என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.
பெயர்ப்பலகைகளிலும் அறிவித்தல்களிலும் தமிழ்மொழி உகந்த எழுத்துப்பிரயோகத்துடன் இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு அமைச்சர் கணேசனுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு தனது தூதரகத்தில் உள்ள வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பான இராஜதந்திரியை அறிவுறுத்துவதாக சீனத்தூதுவர் கூறினார்.
அமைச்சர் கணேசன் முன்னெடுக்கின்ற இன நல்லிணக்கச் செயற்பாடுகளை நன்றாக அறிந்திருப்பதாக கூறிய தூதுவர் அந்த பணிகளுக்கு சீனா உதவத்தயாராக இருப்பதாக தெரிவித்தார்.