கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணையில் இயங்கி வருகின்ற அரிசி ஆலைகளின் சுற்றாடல் உரிமம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட அவசரக் கூட்டம் ஒன்று கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்களான எம்.சி.எம்.றியாஸ், திருமதி பி.எஸ்.குமாரன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சம்சுதீன் ஆகியோரும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சுற்றாடலுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் குறித்த அரிசி ஆலைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
பொது மக்களின் முறைப்பாட்டுகளைத் தொடர்ந்தே இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பொது மக்களின் நலன்களுக்கு எந்த ரீதியிலும் பாதிப்பில்லாத வகையில் சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அரிசி ஆலைகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அரிசி ஆலைகளில் இருந்து வெளிப்படும் புகை, கழிவு நீர் மற்றும் தூசுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறையின் கீழ் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தினால் உரிய தொழில்நுட்பங்களுடன் இப்பொறிமுறையை செய்து கொள்ள வேண்டும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.சி.எம்.றியாஸ் அறிவுறுத்தினார்.
உரிய பொறிமுறையின் கீழ் செயற்படாத அரிசி ஆலைகள் எக்காரணம் கொண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இது விடயத்தில் எவ்வித தளர்வையும் எம்மால் காட்ட முடியாது எனவும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் வழங்கிய ஆலோசனைக்கமைவாக கூடிய விரைவாக இதனை செய்து முடிப்பதற்கு அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் இதனை சிறப்பாக செய்து முடிப்பதற்கு இரு வார கால அவகாசத்தை வழங்குவதற்கு சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உடன்பட்டனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் 12 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.