சுத்தமும், சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றியும் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் அதனைக் கவனத்திற் கொள்ளாமல்தான் பல உணவக உரிமையாளர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று கொழும்பு டி.எஸ்.சேனநாயக கல்லூரியில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவன் தில்தர் பதீன் தனது கவலையினை தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அம்மாணவன் மேலும் கூறுகையில்,நம் நாட்டில் காணப்படுகின்ற பல உணவகங்களில் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றதை எம்மால் காண முடிகிறது. குறிப்பாக பாவனைக்குட்படுத்தப்பட்ட கடதாசிகளை பொதிகளாகப் பயன்படுத்தி அதனுள் உணவுகளை போடுகின்றனர் இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றது. இவ்வாறு சொற்ப இலாபங்களுக்காக பாவித்த கடதாசிகளை உணவக உரிமையாளர்கள் பயன்படுத்தாமல் உணவுகள் பொதி செய்வதற்கென்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய கடதாசிகளைப் பயன்படுத்தி சுகாதாரத்திற்கு உகர்ந்த வகையில் தங்களுடைய வியாபாரங்களை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு இவ் விடயம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும், வைத்திய அதிகாரிகளும் கூடுதல் கவனமெடுத்து உணவகங்களை பார்வையிட வேண்டும் அத்தோடு உணவுகளை வாங்கச் செல்வோரும் முறையற்ற விதத்தில் உணவுகளைத் தந்தால் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று அச் சிறுவன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.