இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் மூலை முடுக்கெல்லாம் சிலைகளும் சமய பாடசாலைகளும் திறக்கப்படும் போது அரபுக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படுவதை தடை செய்யமுயல்வது இனவாத சிந்தனைக்கு பலியாவதாகும் என்பதுடன் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களை திருப்திப்படுத்த முயவதுமாகும்.
அத்துடன் அரபு பாடசாலைகளை வக்பு சபையுடன் இணைக்கப்போவதாக அமைச்சர் ஹலீம் சொல்லியுள்ளதன் மூலம் வக்பு என்றால் என்னவென்று தெரியாதவராக உள்ளார் என்பது கவலை தருகிறது.
ஏற்கனவே பள்ளிவாயல் பிரச்சினைகள் பலவற்றை தீர்க்க முடியாமல் வக்பு சபை தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் போது மதுரசாக்களையும் வக்பு சபையின் கீழ் கொண்டு வருவது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
தற்போது நாட்டில் ஆரம்பிக்கப்படும் அனைத்து மதுரசாக்களும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் மதுரசாக்களுக்கு அமைச்சு எவ்வித வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்காத நிலையில் தனியாரின் மதுரசாக்களை அவர்கள் வக்பு செய்யாமல் வக்பு சபைக்குள் உள் வாங்குவதை அனுமதிக்க முடியாது.
புதிதாக மதுரசாக்கள் உருவாவதை தடுத்தல் என்பதற்கு பதிலாக புதிதாக மதுரசாக்களை உருவாக்குவதற்கான நியாயமான நிபந்தனைகளை அறிவிக்க முடியும்.
ஆண்டு 9 சித்தியடைந்த மாணவர்களை சேர்த்தல் 6 வருடத்துக்கு மேற்படாத வகையில் மதுரசா பாடத்த்திட்டத்தை அமைத்தல், முஸ்லிம் திணைக்களத்தால் தரப்படும் பொதுவான பாட திட்டத்தை கற்றுக்கொடுத்தல், மதுரசா மற்றும் முஸ்லிம் திணைக்ககளம் இணைந்து பொது பரீட்சை நடாத்தி மௌலவி பத்திரம் வழங்கல் போன்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வோர் மதுரசாக்களை நிறுவ முடியும் என்ற சட்டத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறான விடயங்களை கொண்டு வரும் படி உலமா கட்சி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சொல்லி வருகிறது. அத்துடன் மதுரசாவில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறது.
இதையெல்லாம் நிறைவேற்ற முயற்சி செய்யாமல் புதிதாக மதுரசா திறக்க முடியாத சட்டத்தை கொண்டு வருவது முஸ்லிம் சமூகத்தை கருவறுக்கும் செயலாகும். இதற்கு எதிர்க்க ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் முன் வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.