இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.நிந்தவூரில் 115 வீடுகளை அமைக்கும் திட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்:
அம்பாறை மாவட்டத்தில் இதுபோன்ற பல வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்படும்.எந்தவோர் அபிவிருத்தியைச் செய்வதாக இருந்தாலும் பிரதேச சபைகள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால் பல கோடி ரூபா நிதி திரும்பிச் செல்கின்றது.இதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸிடமே உள்ளூராட்சி அதிகாரங்களைத் தாருங்கள் என்று நாம் மேடைகள் போட்டுக் கேட்டோம்.
ஒத்துழைப்பு இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு-போராடித்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டியுள்ளது.அதுமட்டுமல்ல எனது நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட அபிவிருத்திகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.வைத்தியசாலையில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
அமைச்சராகிய நான் ஒரு பக்கமும் பிரதேச சபை ஒரு பக்கமும் இருந்து அபிவிருத்திகளை செய்ய முடியாது.நாட்டில் ஜனாதிபதி ஒரு பக்கமும் பிரதமர் ஒரு பக்கமும் இருப்பதுபோல்தான் நிந்தவூரில் நான் ஒரு பக்கமும் பிரதேச சபை ஒரு பக்கமும் உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும்.இரு தரப்பும் ஒன்றிணைந்தால்தான் முழுமையான அபிவிருத்தியை வழங்க முடியும்.பிரதேச சபை என்னோடு ஒத்து வர வேண்டும்.எதிர்வரும் காலத்தில் அமைச்சராக இருக்கின்றவர் பக்கம்தான் பிரதேச சபை இருக்க வேண்டும்.அப்போதுதான் தடை இல்லாமல் சேவை செய்ய முடியும்.இதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஊருக்கு யார் அபிவிருத்தி கொண்டு வந்தாலும் பரவாயில்லை.அதைச் செய்வதற்கு பிரதேச சபை ஒத்துழைக்க வேண்டும்.ஊருக்கு அபிவிருத்தியே முக்கியம்.நான் எந்தவோர் அபிவிருத்தியையும் தடுக்கமாட்டேன்.
நிந்தவூர் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை.அந்தக் கோட்டை தொடர்ந்து இருப்பதன்மூலம்தான் அபிவிருத்தியை அதிகரிக்க முடியும்.வேறு எவராலும் அபிவிருத்தி செய்ய முடியாது.றிசாத் பதியுதீன் நிந்தவூருக்கு வந்து சட்டி,பானைகளைக் கொடுத்துவிட்டு சென்றதுபோல்தான் ஏனையவர்களின் அபிவிருத்திகளும் இருக்கும்.
முஸ்லிம் காங்கிரசை இந்த மண்ணில் பலப்படுத்துவதன் மூலம்தான் அபிவிருத்திகளை தடையின்றி முன்னெடுக்க முடியும்.
ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் இன்னொரு கட்சியிலும் இருந்துகொண்டு ஆட்சி செய்ய முடியாது;நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.அடுத்த தேர்தல்களில் ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒரே கட்சியில்தான் இருப்பர்.முஸ்லிம் காங்கிரஸ் அதில் பெரும் பங்கை வகிக்கும்.
எமது தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் மேலும் பல சேவைகளை செய்யவுள்ளது.எமது தலைவர் ஹக்கீம் செய்யும் முன் கொக்கரித்துத் திரிபவர் அல்ல.சொல்லாமல் செய்து காட்டுபவர்.அவரின் தலைமையில் எமது அபிவிருத்தி எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படும். -என்றார்.