அரபுக்கல்லூரிகள், ஹிப்ளு மத்ரசாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என வக்பு சபை உறுப்பினர் சட்டத்தரணி யாசீன் சொல்லியிருப்பது எதிர்காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் முயற்சியாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் இன்று (28) ஊடகவியலாளர்களை அவரது கல்முனை அலுவலகத்தில் சந்தித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
இதற்காக சட்டத்தரணி யாசீன் சொல்லுகின்ற காரணங்கள் கோழைத்தனமானதாகும். இவர் இதற்கு சொல்லும் காரணங்களாவன.
இவற்றினை கண்காணிக்க முடியாமல் உள்ளது, அவற்றில் ஒழுங்கான நிர்வாகம் இல்லாமல் உள்ளது, கணக்கு வழக்கு விபரம் இல்லாமல் உள்ளது, நன்மை பயக்கும் காரியங்கள் வக்பு சபையில் பதிய வேண்டும் என சட்டம் உள்ளது என கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் இனவாதிகளுக்கு தீணி போடுபவையாகும். எதிர் காலத்தில் முஸ்லிம்களின் மதுரசாக்கள், அரபுக்கல்லூரிகள் இனவாத அரசுகளால் முற்றாக தடை செய்வதற்கான காட்டிக்கொடுப்புக்களே இத்தகைய கருத்துக்களும் நடை முறையுமாகும்.
நாட்டில் பல அரச பாடசாலைகள் உள்ளன. அவற்றில் பலவற்றில் பௌதீக வள பற்றாக்குறைகள் உள்ளன. ஒழுங்கான ஆசிரியர்கள் இல்லை. கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருமே சித்தியடைவதில்லை. சுமார் 25 வீதம் மட்டுமே சிறப்பு சித்தியடைகிறார்கள். அதிலும் பல்கலைக்கழகம் செல்வோர் சுமார் 2 வீதம்தான்.
இப்படியெல்லாம் பாடசாலைகளில் குறைகள் உள்ளன என்பதற்காக இனி புதிய பாடசாலைகள் திறக்க அனுமதிக்க முடியாது என ஒருவர் சொன்னால் அவரை போன்ற முட்டாள் உலகில் இருக்க முடியாது.
அரபு மதுரசாக்கள் பல சரியான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதற்காக புதிய மதுரசாக்கள் உருவாவதை தடுக்க வேண்டும் என்ற கூற்றும் இவ்வாறான ஒன்றுதான்.
அரபுக்கல்லூரிகள் அனைத்தும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கீழ் பதிவு பெற்றே இயங்குகின்றன. அவை சரியாக இயங்குகின்றதா என்பனவற்றை கண்காணிக்கும் உரிமை அமைச்சுக்கு உண்டு. ஆனாலும் யாசீன் சொல்வதை பார்க்கும் போது மதுரசாக்களை கண்காணிக்கும் திறமை அமைச்சிடம் இல்லை என அவர் சொல்வதாகவே கருத முடிகிறது. அமைச்சிடம் அதற்குரிய அதிகாரம் இருந்தும் கவனிக்க முடியாமைக்கான காரணத்தை அமைச்சு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.
எந்தவொரு மதுரசாவின் கணக்கறிக்கையையும் அமைச்சு கோரினால் நிச்சயம் அதனை வழங்கத்தான் செய்வர். அமைச்சின் பொடுபோக்கு தனத்துக்காக அரபிக்கல்லூரி மற்றும் மதுரசாக்களை இன்னுமொரு நிறுவனமான வக்புக்குள் தள்ளிவிட முடியாது.
அத்துடன் நன்மை பயக்கும் அனைத்தும் வக்பு சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது சட்டமாகும் என யாசீன் தெரிவித்துள்ளார். அப்படியொரு சட்டம் இஸ்லாத்தில் உள்ளதா அல்லது நாட்டு சட்டத்தில் உள்ளதா என்பதை அவர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
அரபுக்கல்லூரிகள் தீவிரவாதத்தை விதைக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகின்றன என்பதை கவனிக்க வேண்டும், அரபு கல்லூரிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை சம்பிக்க ரணவக்கவும் பொது பல சேனாவுமே கடந்த காலங்களில் முன் வைத்து வந்தன. இக்கருத்துக்களுக்கு அப்போதே உலமா கட்சி தகுந்த பதிலடி கொடுத்தது.
பொதுபலசேனாவை எதிர்த்து நல்லாட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்களுக்கு செய்யும் பிரதியுபகாரம் இந்த அநியாயங்களா என கேட்க வேண்டியுள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சியில் பொது பல சேனா எவ்வளவு சத்தமிட்டும் ஹலால் தவிர வேறு எதையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. இந்த அரசில் அவர்கள் சத்தமின்றி அரச முஸ்லிம் அமைச்சர்களை வைத்தே முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் நிலை காணப்படுகிறது.
இப்போது அத்தகைய இனவாதிகளின் கருத்துக்களை உள்வாங்கி இந்த அரசின் அமைச்சர்களும் அரச நிர்வாகிகளும் நடைமுறைப்படுத்த முனைவதன் தொடராகவே இது சம்பந்தமான அமைச்சர் ஹலீமினதும் சட்டத்தரணி யாசீனின் கருத்துக்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய அதிகார அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எந்தவொரு புதிய உரிமையையும் பெற்றுத்தர முடியாத வங்குரோத்து நிலையில் இருந்து கொண்டு சுமார் அறுபது வருடங்களின் முன் நம் முன்னோர் புத்திசாலித்தனமாக பெற்றுத்தந்த உரிமைகளையும் இல்லாமலாக்க வேண்டாம் என அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.