ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (11) வெள்ளிக்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
நான்காயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹெட ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்கி அதன்மூலம் இந்த நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நீர்த் தேக்கம் உருவாக்கத்தினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு குடியிருப்புக்கான மாற்றுக் காணிகளையும், இழப்பீடுகளையும் வழங்குவதற்கு விசேட செயலணியொன்றை அமைப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
இச்செயலணியில் நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வன பரிபாலனத் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் பாதிப்புள்ளாகும் பகுதிகளின் பிரதேச செயலகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள அரசியல் தலைமைகளுக்கு இதுபற்றி அறிவுறுத்துவதோடு, அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஏறத்தாழ 12,576 மில்லியன் ரூபா செலவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அமைக்கப்படவுள்ள ஹெட ஓயா நீர்த்தேக்கத்தின் மூலம் குடிநீர் திட்டத்துக்கு மேலதிகமாக 15,000 ஏக்கர் விளைச்சல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதற்கு கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டமானது சுமார் 20 பில்லியன் ரூபா சீன நாட்டு கடனுதவியால் அமைக்கப்பட இருப்பதுடன், இதனூடாக சியம்பலாண்டுவ, பொத்துவில், மடுல்ல, பானம, லஹுகல முதலான பிரதேசங்களிலுள்ள 87 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும் நீர்த்தேக்கத்துக்கு உள்வாங்கப்படும் காணிகளில் 90% காணிகள், அரச காணிகளாக இருப்பதுடன் இந்த நீர்த்தேக்கம் அமைப்பதன் மூலம் பாதிக்கப்படும் குடியிருப்புக்களுக்கு பதிலாக மாற்றுக்காணி வழங்கும் திட்டத்துக்கு 400 ஏக்கர் காணி தேவைப்படும் எனவும் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னெ, நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். மோகன் ராஜா, மேலதிக செயலாளர் எம்.மங்கலிக்கா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமணசேகர, நீர்ப்பாசன அமைச்சின் நீர்வள திட்டமிடல் பணிப்பாளர் கே. வெலிகேபொலகே, நீர்ப்பாசன திணைக்கள செயற்றிட்ட பணிப்பாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.