தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டு நம்பிக்கை வார்த்தைகளில் என்றும் போல் இன்றும் நம்பிக்கை வைத்து மலர்ந்திதிருக்கும் இந்த இனிய தைப்பொங்கல் நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பண்டிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையாக தைப்பொங்கல் அமைகிறது. வேறு எல்லா பண்டிகைகளையும் விட தைப்பொங்கலை விரும்பிக் கொண்டாடுவதுண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. தைப்பொங்கல் நன்றியறிதலுக்கான பண்டிகை. நம்பிக்கைதரும் பண்டிகை. எளிமையான பண்டிகை. வலி மறக்கும் பண்டிகை, வழியமைக்கும் பண்டிகை.
கடந்துசென்ற வருடத்தின் கடைசி மாதமான மார்கழியில் பழையவற்றைக் கழித்து புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளுக்கான களம் அமைக்கின்ற பண்டிகையாக தைப்பொங்கல் அமைகின்றது. எல்லா மார்கழியிலும் பழையனவற்றை கழிக்கின்றபோதும் எல்லா மார்கழியிலும் பழையன சேர்ந்துவிடுகின்ற என்பதுதான் யதார்த்தம். அதேபோல எல்லா தைபிறப்பிலும் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையும் தமிழர் பண்பாட்டில் இருந்துவருகின்றது. எனவே தை பிறப்பதும் அதன் மீது நம்பிக்கை வைப்பதும் எப்படி வழமையானதோ அதேபோல அடுத்த மார்கழியில் பழையனவற்றை கழிக்கவும் பிறக்கும் தை மாதத்தில் புதிய சிந்தனைகளையும் நாம் தயாராக்க வேண்டும். எம்மை நோக்கி பல சவால்கள் எப்போதும் வந்துகொண்டே இருக்கிறது. அதனை தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ள இந்த தைப்பொங்கலிலும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.