வாபஸ் பெறுவதுடன் மன்னிப்புகேட்கவேண்டும் என ஊடகமாநாட்டில் தெரிவிப்பு.
காரைதீவு நிருபர் சகா-பிரதேசசபை உறுப்பினரொருவரின் பத்திரிகைச் செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதேசபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டு எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
இந்தச்சம்பவம் இன்று(4) வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேசசபையில் இடம்பெற்றது.
ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோதிலும் தவிசாளரின் வேண்டுகோளுக்கமைவாக அவர்கள் அதனைக் கைவிட்டு அவர்களது வலுவான எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்து குறித்த செய்தியை வாபஸ்பெறவேண்டும் என்று குறிப்படும் மகஜரினைக் கையளித்துள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி தேசியநாழிதலொன்றில் காரைதீவு பிரதேசசபை சுயேச்சைஉறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்புத் தொடர்பாகவே இந்த எதிர்ப்பலைகள் ஊழியர்கள் மத்தியில் தோன்றியுள்ளன.
குறித்த மகஜரினை உத்தியோகத்தர் சமீம் பகிரங்கமாக வாசித்து தவிசாளரிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் சார்பில் மின்னிணைப்பாளர் சி.சிறிதரன் சாரதி இ.வேல்முருகு ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்தனர்.
அவர்களது கருத்தில்: இப்புதியசபை வந்து 10மாதகாலத்துள் 250 மின்விளக்குகளை இனமதபேதமின்றி சகலஇடங்களிலும் பொருத்தியுள்ளோம். கிழக்கில் ஏனைய சபைகள் உயரதிகாரிகள் புகழும்வகையில் திண்மக்கழிவை அகற்றிவருவது நாமே. மழைவெயில் பாராது சேவையாற்றும் எங்களைக்கொச்சைப்படுத்தி உறுப்பினர் பூபாலரெத்தினம் செய்திவெளியிட்டிருப்பது வேதனைக்குரியது. இதுவரையில் யாருமே எவ்விதமுறைப்பாடும் தெரிவித்திருக்கவில்லை. இது எம்மை மட்டுமல்ல காரைதீவையும் களங்கப்படுத்தும் செயற்பாடாகும். அவர் அதனை வாபஸ்பெறவேண்டும்.தவிசாளர் கேட்டதற்காகவே எமது எதிர்ப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் இவ்வாறு தெரிவிக்கிறோம். என்றனர்.
அதனையடுத்து காரைதீவு பிரதேசசபைதவிசாளர் கி.ஜெயசிறில் ஊடகவியலாளர் மாநாடொன்றை அவரது அலுவலகத்தில் நடாத்தினார்.
அவர் கூறுகையில்:
கடந்த 10மாதங்களாக குறைந்த வருமானத்துடன் நிறைந்த சேவையை நேர்மையாக பகிரங்கத்தன்மையுடன் சிறப்பான மக்கள்சேவையாற்றிவரும் எமது உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மீது உறுப்பினர் பூபாலரெத்தினம் அபாண்டமான பழியைச்சுமத்தியதோடு பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
தவிசாளர் பதவிக்காக என்னுடன்போட்டியிட்டுத் தோல்விகண்டஅவர் இன்று அதனைத்தாங்கிக்கொள்ளமுடியாமல் தொடர்ச்சியாக பசப்புவார்த்தைகளையும் பொய்களையும் கூறிவருகிறார்.
என்மீது பழியைச்சுமத்தினால் நான் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது ஊழியர்கள் மீது சுமத்துவதென்பதை ஏற்கமுடியாது.
அவர்கள் கிளர்ந்தெழுத்து ஆர்ப்பாட்டம் பணிப்பகிஸ்கரிப்பு செய்யப்போவதாகக்கேட்டார்கள். அது எமதுசபைக்கு அழகல்ல என்றுகூறி நான் அதனைத்தடுத்தி நிறுத்தினேன். எனது கருத்தைக்கேட்ட அவர்களுக்கு நன்றிகூறுகிறேன்.
எமது சபை வருமானம் குறைந்தசபை. இங்கு கோடிக்கணக்கில் சொத்துக்களிருக்கவேண்டும் நாம் சுகபோகமனுபவிப்பதற்கு. சுய இலாபம் பெறுவதற்கு இங்கு என்ன இருக்கிறது.
கிழக்கிலே ஆளுநர் முதல் உள்ளுராட்சி ஆணையாளர்வரை புகழ்ந்துபேசும் ஒரு சபையாக விளங்கும் எமது காரைதீவுப்பிரதேசசபைக்கும் வித்தகன் விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணுக்கும் களங்கம் ஏற்படும்வகையில் உறுப்பினர் பூபாலரெத்தினம் மட்டும் நடந்துவருவது கண்டனத்துக்குரியது.
பட்ஜெட்டில் பிழையென்றால் பகிரங்கமாக உரிய அதிகாரிகளிடம் முறையிடலாம். எமது பட்ஜெட் வாசிகசாலை தொடக்கம் பல இடங்களிலும் காணப்படுகின்றது.அதில் பழியிருந்தால் அதனைச்சுட்டிக்காட்டி தேவையெனின் சட்டநடவடிக்கை எடுக்கலாம். நேர்மையாக நீதியாக நடக்கும் நாம் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத்தயாராகவுள்ளோம். அடுத்தகூட்டத்தில் கேள்வியிருக்கிறது.
12உறுப்பினர்களிலே இவர் மட்டுமே இதுவரை தமக்குவாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் இருக்கிறார். அவ்வட்டார மக்களிடமிருந்து ஆலோசனை சபையொன்றைத்தருமாறு கேட்டிருந்தேன். 5கூலியாட்களுடன் உறுப்பினர்கள் தத்தம் பிரதேச வடிகான்களை சுத்தப்படுத்த நிதிதருவதாகக்கூறி செய்யுமாறு பகிரங்கமாக சபையில் கூறியிருந்தேன். இவர் எதனையும் மக்களுக்குச் செய்யவில்லை. இவற்றையெல்லாம் வாக்களித்த அந்த வட்டார மக்கள் அவரிடம்கேட்கவேண்டும். அழைக்கின்ற கூட்டங்களுக்கு வருவதில்லை.
சிலர் தம்மை முன்னாள் தவிசாளர் முன்னாள் உறுப்பினர் என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் தன்னை 2020இல் சுழற்சிமுறை உறுப்பினர் என்றுகூறிக்கொண்டு சபைக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறார்;.
உபதவிசாளர்கூட பட்ஜெட்டை எதிர்த்தவர்தான் ஆனால் தற்போது அவரே 90வீத சேவை எமதுசபையில் சிறப்பாக இடம்பெறுவதாகக்குறிப்பிடுகின்றார்.
எனவே அந்தச்செய்தியை வெளியிட்ட அவர் உடனடியாக அதனை வாபஸ்பெறவேண்டும் அத்துடன் எமது ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்கவேண்டும் என்றார்.
சபைக்கு வெளியே கழிவகற்றும் உழவுஇயந்திரங்களை நிறுத்திவிட்டு ஊழியர்கள் எதிர்ப்பிலீடுபட்டார்கள்.