முயற்சிகள் தீவிரம் என்கிறார் பைசல் காசிம்
ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை நேற்று ஞாயிற்றுக் கிழமை [21.01.2019] திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:
இந்த ஆயுர்வேத வைத்தியசாலை மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.இதை முடிப்பதற்கு உரிய நேரத்தில் நிதி வழங்கப்பட்டபோதிலும்,சில அரசியல்வாதிகள் அந்த நிதியை அவர்களது வைத்தியசாலைக்கு பயன்படுத்தினர்.பலத்த இழுபறியின் பின்னர் இப்போதுதான் அதைப் பூரணப்படுத்தி திறக்க முடிந்துள்ளது.
இந்த நிந்தவூர் பகுதியில் 150 மில்லியன் ரூபா செலவில் எல்லா வீதிகளையும் புனரமைப்புச் செய்யவுள்ளோம்.இந்த வருடம் முடிவதற்குள் அந்தப் பணியை முடித்துவிடுவோம்.
எமது இளைஞர்களின் நலன் கருதி பெட்மிண்டன் கோர்ட் ஒன்றை ஒரு கோடி ரூபா செலவில் நிறுவினேன்.அதை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு பிரதேச சபைத் தலைவர் தடையாக இருக்கின்றார்.நான் இதை அமைத்தேன் என்ற ஒரேயொரு காரணத்துக்காக அவர் இவ்வாறு செய்கிறார்.
இந்த பகுதி இளைஞர்கள் விளையாடுவதற்காகத்தான் நான் இதை அமைத்தேன்.எனது பிள்ளைகள் விளையாடுவதற்காக அல்ல.அந்த இடம் இப்போது சிதைவடைந்து காணப்படுகின்றது.அதைப் புனரமைப்பதற்காக நான் பணம் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன்.பிரதேச செயலாளரை அழைத்து இதைக் கூறினேன்.
என்மீது உள்ள அரசியல் பொறாமை காரணமாக தயவு செய்து மக்களுக்கு கிடைக்கின்ற சேவைகளைத் தடுக்க வேண்டாம் என்று நான் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
'பீச் பார்க்' நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.விரைவில் அதை முடிப்போம்.இந்தப் பிரதேச மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பதற்கு இவ்வாறான ஏற்பாடு தேவையாக உள்ளது. தொற்றா நோயைத் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியம்.அதற்காக நாம் நடை பாதை ஒன்றை அமைக்க இருக்கின்றோம்.
இந்த வேலைத் திட்டத்துக்காக 2225 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.எமது தலைவர் ரவூப் ஹக்கீமின் உதவியால் இது கிடைக்கின்றது.நிந்தவூர் மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக எமக்கு 300 மில்லியன் ரூபா நிதி கிடைத்தபோதிலும் பிரதேச சபையின் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பணம் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றுவிட்டது.
இதற்காகத்தான் நாம் தேர்தல் காலங்களில் எங்களிடம் சபையைத் தாருங்கள் என்று கேட்டோம்.ஆட்சி செய்யப் போகிறவர்கள் நாங்கள்.எங்களிடம் சபை இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்று கூறினோம்.நீங்கள் எங்களிடம் சபையைத் தராததன் காரணமாக இன்று நாங்கள் நிதியைக் கொண்டு வந்து கொட்டி அபிவிருத்திகளை செய்கின்றபோதிலும்,பிரதேச சபை அதற்குத் தடையாக இருக்கின்றது.
கம்பெரேலிய வேலைத் திட்டத்தின் ஊடாக 22 வீதிகளை செப்பனிட்டோம்.அவற்றை முடிப்பதற்கு நாங்கள் எதிர்கொண்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.பிரதேச சபை அதிக முட்டுக்கட்டைகள் போட்டன.சாரத்தை மடித்துக்கட்டிக் கொண்டு சண்டித்தனத்தில்தான் நாம் வீதிகளை போட்டோம்.இனிச் செய்யப்போகின்ற வேலைகளுக்கும் அவ்வாறே இந்த பிரதேச சபை முட்டுக்கக்கட்டை போடும்.மக்கள்தான் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொழும்பு,கண்டி,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற இடங்களுக்குச் செல்லாமல் எங்களது பகுதிகளிலேயே அனைத்து வைத்திய சேவைகளையும் பெற வேண்டும் என்பதே எனது கனவு.அதை அடைவதற்காக உழைப்பேன்.
இந்த அரசு செய்யும் வேலைத் திட்டங்களில் ஆகக்கூடிய வேலைகளை எமது சுகாதார அமைச்சுதான் செய்திருக்கின்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பல வைத்திய சேவைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
கடந்த அரசில் புற்று நோயாளி ஒருவருக்கு 15 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மாத்திரம்தான் வழங்கப்பட்டன.ஆனால்,ராஜித சேனாரத்ன அதை மாற்றி அந்த நோயாளி குணமடையும் வரை அல்லது மரணிக்கும் வரை மருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.இவ்வளவுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற வரையறை கிடையாது.
எமது பிரதேசத்தில் பூரணமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு.அதில் ஒன்றுதான் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் அமைக்கும் கனவு.அவ்வாறு அமைப்பதென்றால் போதனா வைத்தியசாலை ஒன்று தேவை.
கரையோர வைத்தியசாலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனூடாக அந்த போதனா வைத்தியசாலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.இந்தக் கனவை நிறைவேற்றும் வரை நான் அயராது உழைப்பேன்.-என்றார்.