கல்முனை மாநகரத்தில் நான்கு தளங்களைக் கொண்ட சொப்பிங் மோல் அமைக்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் திட்டத்திற்கான வரைபட தயாரிப்பு தொடர்பான கள விஜயமும் கலந்துரையாடலும் இன்று (11) வெள்ளிக்கிழமை கல்முனை பொதுநூலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் (சி.ஈ.சி.பி) பொறியியலாளர் எம்.ஏ.எம். றிஸ்கான் உள்ளிட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட கட்டட வடிவமைப்பாளர்கள் குழு மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக், இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்முனை பொதுநூலக அமைவிடத்தில் சொப்பிங் மோல் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள பொதுநூலக கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை உள்ளடக்கியதாக குறித்த சொப்பிங் மோல் கட்டடம் அமையப்பெறவுள்ளது.
வாகன தரிப்பிட வசதியுடன் கூடிய நான்கு தளங்களை கொண்டதாக அமைக்கப்படவுள்ள இக்கட்டடமானது தரை மற்றும் முதலாம் தளங்களில் விற்பனைக் காட்சி அறைகளை கொண்டதாகவும் 2ஆம், 3ஆம் தளங்களில் அலுவலகங்களை அமைக்கக் கூடியவாறும் 4ஆம் தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுநூலகம் அமையக்கூடியவாறும் வடிவமைக்கப்படவுள்ளது.
பொதுநுலகம் அமைக்கப்படவுள்ள 4ஆம் தளத்திற்கு தனிப்பட்ட மின் உயர்த்தியும் (லிப்ட்) தரைப் பகுதியிலிருந்து முதலாம் தளத்திற்கு நகர் படியும் (எஸ்கலேடர்) ஏனைய தளங்களுக்கு மற்றுமொரு மின் உயர்த்தியும் (லிப்ட்) மையப்படுத்தப்பட்ட காற்றுச் சீராக்கியையும் (ஏ.சி) கொண்டதாகவும் சூரிய சக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் அமைக்கப்படவுள்ளது.
இலங்கையில் முன்னனி நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனம் (சி.ஈ.சி.பி) இக்கட்டடத்தை வடிவமைக்கும் பணியினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.