குறுகிய சுய இலாப சூழ்ச்சிகளுக்குள் காரைதீவு பிரதேச சபை கட்டுண்டு கிடக்கின்றது, இதனால்தான் கடந்த 08 மாதங்களாக குறிப்பிட தக்க எந்த நன்மையையும் காரைதீவு மக்களுக்கு செய்து கொடுக்க முடியவில்லை என்று இப்பிரதேச சபையின் காரைதீவு மகா சபை சுயேச்சை குழு உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களை இன்று (03) வியாழக்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் காரைதீவு மாகா சபை செயற்பாட்டாளர் க. குமாரசிறியும் கலந்து கொண்டார்.
உறுப்பினர் பூபாலரட்ணம் இங்கு மேலும் உரையாற்றும் போது,
ஊடக போராளிகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது முதல் வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன். காரைதீவு மண்ணுக்கு வருகை தந்து உங்கள் பேனா மூலம் எங்கள் மக்களின் பிரச்சினைகளை உலகத்துக்கு வெளிக்கொணர முன்வந்தமைக்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்துக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
இன்று நாம் எல்லோருடைய வாழ்விலும் அரசியல் என்பது அடிப்படையான விடயமாக விளங்குகின்றது. அரசியல் இல்லாமல் அரிசியும் இல்லை என்கிற நிலைதான் காணப்படுகின்றது. தேசத்தின் அரசியலில் மாத்திரம் அன்றி பிரதேசத்தின் அரசியலிலும் மிகவும் முக்கியம் வாய்ந்த தருணத்தில் நாம் கூடி இருக்கின்றோம்.
எனக்கு வயது 74. காரைதீவு மண்ணுக்கும், மக்களுக்கும் வேண்டிய சேவைகளை எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் இருந்து என்னால் முடிந்த வகையில், என்னால் முடிந்த வரையில் நான் மேற்கொண்டு வந்திருக்கின்றேன். காரைதீவு மக்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் ஆகியவற்றை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே காரைதீவு மகா சபை மூலமாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிட்டேன்.
ஆயினும் குறுகிய சுய இலாப அரசியல் சூழ்ச்சிகளுக்குள் காரைதீவு பிரதேச சபை கட்டுண்டு கிடப்பதால் கடந்த 08 மாத காலமாக எமது மக்களுக்கு எந்தவொரு நன்மை பயக்கின்ற விடயத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ள முடியாமல் ஆகி இருக்கின்றது. இனியும் இந்த நிலை தொடர்வதற்கு நானும், நான் சார்ந்த காரைதீவு மகா சபையும் எந்த சூழ்நிலையிலும் நிச்சயம் இடம் கொடுக்க போவதில்லை.
நாம் காரைதீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை எதிர்த்தோம். ஏன் எதிர்த்தோம்? எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தோமா? தவிசாளரை எதிரியாக பார்த்து எதிர்த்தோமா? இல்லவே இல்லை. எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வரவு - செலவு திட்டமாக அது இருக்கவே இல்லை. எமது மக்களின் எதிர்காலத்துக்கான திட்டமாகவும், திட்டமிடலாகவும் அது இருக்கவே இல்லை. மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கின்ற வரவு - செலவு திட்டம் என்றால் அதை நிச்சயம் நாம் இரு கரம் கூப்பி வரவேற்று இருப்போம். ஆனால் அது வரவு - செலவு திட்டம் என்கிற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்ற வேலை திட்டமாக அல்லவா இருந்தது?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் பழமொழி. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நன்மையானவையாக நடக்கட்டும். தவிசாளர் ஜெயசிறில் அவரை சுய விமர்சனம் செய்து கொள்வதற்கு கடந்த 08 மாத கால அவகாசம் கிடைத்து இருக்கின்றது. புதிய தலைவரை நாம் பார்க்க விரும்புகின்றோம். புதிய தலைவருக்கு நாம் கை கொடுக்க விரும்புகின்றோம். மாறுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.