காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் தைப்பூச வித்தியாரம்ப நிகழ்வும் பாடசாலையின் புதிய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்துவைக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
பாடசாலையின் ஆசிரியைகளான நிலாந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்துகொண்டார். கௌரவஅதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக பழையமாணவர்கள் புதிய மாணவர்களுக்கு பூமாலைசூட்டி
இனிப்புக்கொடுத்து வரவேற்றார்கள். கூடவே பெற்றோரும் இருந்தார்கள்.
வரவேற்பின்பின்னர் சிறுகூட்டமும் பெற்றோருடன் இடம்பெற்றது.
அங்கு பிரதமஅதிதியான தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
20வருடங்களைத்தாண்டி வீறுநடைபோடும் இம்முன்பள்ளி காரைதீவில் மிகப்பழமையான முன்பள்ளியாகும். 'எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே .. 'என்ற பாடலைக்கேட்டிருப்போம். அதற்கு ஒருபடிமேல்சென்று பார்த்தால் இந்த ஆசிரியர்களும் பிள்ளைவளர்ப்பினில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது பெற்றோராவர்.
நீங்கள் ஒரு கல்லை கொடுக்கிறீர்கள். அதைச்செதுக்கி சிற்பமாக்கித்
தருபவர்கள் இந்த ஆசிரியைகளே. அவர்களைப்பாராட்டுகிறேன்.
தமிழர்பாராம்பரியத்தின்படி தைப்பூசத்தில் ஏடுதொடங்கல் நிகழ்வும் உள்ளது.
அதனை இந்த மொன்டிசோரி சிறப்பாகச் செய்வதையிட்டு பாராட்டுகிறேன் என்றார்.
இவ்வாண்டில் நடைமுறைத்தப்படவிருக்கின்ற செயற்றிட்டங்கள் விழாக்கள்
தொடர்பாக பணிப்பாளரால் எடுத்துக்கூறப்பட்டது.
பின்னர் வசீகரன் சமுக அறக்கட்டளை மன்ற அனுசரணையில் இப்பாடசாலைக்கு புதிய பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டது.
பிரதமஅதிதியான மன்றத்தின் பணிப்பாளரும் தவிசாளருமான கி.ஜெயசிறில் புதிய பெயர்ப்பலகையை நாடாவெட்டி திரைநீக்கம் செய்துவைத்தார். பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்விலும் கலந்துகொண்டனர்.