ஊர் சுற்றி வந்த உண்மை!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ருதமுனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறியுள்ளார். அதாவது, ‘இதுவரை காலமும் எமக்கு மறுக்கப்பட்டிருந்த பிராந்திய அபிவிருத்தியை மீள முன்னெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தற்போது நாம் உடன்பாட்டைக் கண்டுள்ளோம் இதனை யாரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, இதுவரை காலமும் எமது பிராந்திய அபிவிருத்தி மறுக்கப்பட்டிருந்தது என்ற உண்மையைத் தெட்டத் தெளிவாக அவர் கூறியுள்ளார். எனவே, எதிர்காலத்தில்தான் அதுவும் இந்த அரசாங்கத்தின் மிகக் குறுகிய காலப் பகுதியில்தான் எமக்கான அபிவிருத்திப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படவுள்ளன என்பதே அதன் கருத்தாகும். ஆனால், நடக்காத விடயம்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், அதன் பின்னரான பொதுத்தேர்தல், அதனையடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டமூலங்களுக்கு ஆதரவு தெரிவித்த எமது முஸ்லிம் கட்சித் தலைமைகள் மைத்திரியிடமோ ரணிலிடமோ எதனையும் கேட்காமலேயே எமக்கான தேவைகள் எவை என அவர்கள் இருவரும் எமது தலைமைகளிடம் கேட்டுச் செய்ய வேண்டிய தார்மிக பொறுப்புள்ளவர்கள். ஆனால், நடப்பவை தலைகீழாக.
மைத்திரியை ஜனாதிபதியாக்கியமை, ரணிலைப் பிரதமராக்கியமை, நல்லாட்சியைக் கொண்டு வந்தமை, சட்டமூலங்களுக்கு நாடாளுமன்றத்தில் சார்பாக வாக்களித்தமை ஆகிய இந்த நான்கு விடயங்களுக்கும் முஸ்லிம் கட்சித் தலைமைகள் ஒப்பந்தங்களுடனோ ஒப்பந்தங்கள் செய்யாமலோ ஆதரவு வழங்கியிருக்கலாம். அவை வேறு விடயங்கள்.
மேற்சொன்ன விடயங்களுக்கான கைமாற்றாக, நன்றிக்க கடனாக எமது முஸ்லிம் சமூகத்துக்கு இன்றைய அரசாங்கம் இற்றைவரை நிறையவே சேவைகள் செய்திருக்க வேண்டும். மாறாக இடம்பெறுவன அநியாயங்களும் பாரபட்சங்களுமே.
எமது பிரதேச அபிவிருத்திகளுக்காக எமது முஸ்லிம் கட்சித் தலைமைகள் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளிடம் கையேந்தி உதவி கேட்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. உதாரணத்துக்கு வடபுலத்தில் அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களால் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான திட்டங்களுக்கு முஸ்லிம், அரபு நாடுகளே உதவிகளைச் செய்கின்றன. ஆனால், இலங்கை அரசின் பங்களிப்பு என்பது வெறும் பிரசாரத்தில் மட்டும் உச்சத்தைத் தொடுகிறது..
மேலும், எவரையும் ஆட்சியில் அமர்த்தி விட்டு, அவர்களையும் தங்களையும் அழகு பார்க்கும் தேவை முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்கவே கூடாது. மாறாக, அரசாங்கத்தின் ஊடாக எமது சமூகத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்வித்து முஸ்லிம் சமூகத்தை அழகு பார்க்கச் செய்ய வேண்டும்.
நாங்கள் எமக்கான உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் தேவையில்லை ஆனால், சமூகம் என்று வரும்போது, எமது வலிமை என்பது சிப்பாயிடம் காணப்படும் போராட்டக் குணம் போன்று காணப்பட வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களிடமிருந்து இவ்வாறனதொரு விடயம் வெளிவந்திருக்கவே மாட்டாது.
இந்த அடிப்படையில்தான் இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் மருதமுனைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களை நான் நோக்குகிறேன்.
அதாவது, ‘இதுவரை காலமும் எமக்கு மறுக்கப்பட்டிருந்த பிராந்திய அபிவிருத்தி’ என்று அவர் கூறும்போது, அபிவிருத்தி விடயத்தில் இதே அரசாங்கத்தினால் நாங்கள் புறக்கணிப்பட்டுள்ளோம் என்பது, இன்றேல், ரணில் விக்கிரமசிங்க எமது தலைமைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகிறது. இதில் எங்கு பலம் உள்ளது? எங்கு பலவீனம் உள்ளது என்பதனை அறிவதற்குப் பகுப்பாய்வு செய்யும் தேவை இல்லை.
இதுவரை காலமும் எமக்கு மறுக்கப்பட்டிருந்த எமது பிராந்தியங்களின் அபிவிருத்தியை மீள முன்னெடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் உடன்பாடு காணப்பட்டுள்ளது என்பதன் மூலம் கடந்த காலங்களில் யாரால் எமது பிராந்திய அபிவிருத்தி மறுக்கப்பட்டிருந்தது என்ற ஒரு கேள்வியும் இங்கு எழுகிறது.
நிச்சயமாக கடந்த 51 நாட்கள் ஆட்சிக் காலத்தில்தான் எமது அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன என்று கூறவே முடியாது. மறுதலையாக, 51 நாட்கள் ஆட்சி செய்தவர்களால்தான் எமது பிராந்தியங்களின் அபிவிருத்தி மறுக்கப்பட்டிருந்தால் அதனை மீள முன்னெடுப்பதற்கு ரணிலுடன் இன்னொரு இணக்கப்பாட்டுக்கு ஏன் வரவேண்டும்? அவ்வாறனதொரு தேவை இல்லையே?.
நல்லாட்சி அரசாங்கத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருந்தபோது எமது பிராந்தியங்களின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்றைய தேசிய அரசாங்கத்தின் பிரதமராகவும் இருக்கும் அதே ரணில் விக்கிரமசிங்க அரசினால்தான் எமது பிராந்திய அபிவிருத்திப் பணிகள் மறுக்கப்பட்டதோ என்ற கேள்வியும் இங்கு எழுகிறது?

இந்த விடயத்தை நான் இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை இலக்கு வைத்து அவரைக் குற்றஞ் சொல்லும் நோக்கில் கூறவில்லை. அவரின் கருத்தை பொதுவான கருத்தாகக் கொண்டே இந்தப் பதிவை இடுகிறேன்.
நல்லாட்சி காலம் முதல் தேசிய ஆட்சியான இன்றைய காலகட்டம் வரை ஒரேயொரு மாவட்ட அரசாங்க அதிபரும் சில தூதுவர்களும் எமது சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.( இரு முஸ்லிம் ஆளுநர்களின் நியமனம் ஜனாதிபதியினால் செய்யப்பட்டது. அந்த நியமனங்களுக்கான காரணங்களும் வேறு) இது தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் பயன் பெறக் கூடியதாக இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு முழுமையான நிறைவடைந்த அபிவிருத்திகள்தான் என்ன?
எங்கள் அரசாங்கம், நாங்கள் ஆதவரளிக்காவிட்டால் இந்த அரசாங்கம் இன்று ஆட்சிக்கு வந்திருக்காது என்று நமது அரசியல் தலைமைகள் மார்தட்டி அடையும் மகிழ்ச்சி , திருப்திக்கு ஒப்பாக எமது முஸ்லிம் சமூகம் தங்களது அபிலாஷைகள், உரிமைகள். அபிவிருத்தி விடயங்களில் இன்னும் மகிழ்ச்சியடையாத நிலைமை தொடர்வது வேதனையும் கவலைக்கும் உரியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -