சாய்ந்தமருது-
ஒரு சிறுபான்மை சமூகத்தின் உரிமைப் போராட்டத்தினை மழுங்கடிப்பதற்கு பெரும்பான்மை சமூக ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள்தான் அபிவிருத்தி என்னும் சலுகைகளும், அதன்மூலம் சமூகத்துக்குள் பிளவுகளை உண்டுபன்னுவதுமாகும்.
எமது நாட்டிலும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை மழுங்கடிப்பதற்கு சிங்கள ஆட்சி தலைவர்கள் இதே வழிமுறைகளை பின்பற்றி தோல்வியடைந்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் விடயத்தில் அவர்கள் தோல்வியடையவில்லை.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்பு அரசியல் போராட்டம் தீவிரம் பெற்றிருந்தது. தமிழ் மக்களின் எழுச்சி மேலோங்கியதனால் அரசியல் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து ஆயுதப் போராட்டத்துக்கான சூழ்நிலைகள் உருவானது.
தமிழர்களின் முற்போக்கு சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை சலுகைகளுக்காக கையேந்தும் நிலையை உருவாக்குவதுடன், தமிழர்களின் ஒற்றுமையை சிதைவடைய செய்ய வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர் சிறிமாவோ பண்டாரநாயக்க திட்டமிட்டார்.
அவரது திட்டத்துக்கமைவாக தனது முகவரான யாழ்பான மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா மூலமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார்.
துரையப்பாவின் அன்றைய நடவடிக்கைகள் தமிழர் எழுச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் ஓர் இடைஞ்சலாக தென்பட்டது. தனது சிங்கள எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு தமிழராக அவர் இருந்தார்.
இந்த நிலையில்தான் 1975 ஜூலை மாதம் பிரபாகரன் என்னும் இளைஞ்சன் தனது கைத்துப்பாக்கியினால் முதல்வர் அல்பிரட் துரையப்பா மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்.
இந்த தாக்குதல்மூலம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு முகவராக செயல்படுகின்றவர்களின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்ததுடன், அவரது கொலை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தது.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ் இன துரோகிகள் என்று அடையாளப் படுத்தப்பட்ட தமிழ் முகவர்கள் மூலமாக ஏராளமான சலுகைகளை வழங்கி தமிழ் தேசியத்தை மழுங்கடிக்க சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்ட குணத்தினை மழுங்கடிப்பதில் தோல்வியடைந்த சிங்கள ஆட்சியாளர்கள், அதே சலுகைகளை காண்பித்து முஸ்லிம்களை அபிவிருத்தி என்னும் சலுகைக்காக சிங்கள ஆட்சியாளர்களிடம் போட்டி போட்டுக்கொண்டு கையேந்தும் நிலையை உருவாக்கியுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை உண்டுபண்ணுவதிலும் வெற்றி கண்டுள்ளார்கள்.
தாங்கள் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் என்ற அரசியல் தெரியாத முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலர், எதெற்கெடுத்தாலும் உரிமையற்ற அபிவிருத்தி என்னும் சலுகைகளை பற்றி பேசுவதனையே காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் அரசியல்வாதிகள் யாருக்காவது பதவி கிடைத்தால் அவர்களை விழுந்தடித்துக்கொண்டு பாராட்டுவதும், புகழ்வதும் பின்பு அவர்களிடமிருந்து ஏதாவது தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாதபோது அவர்களை விமர்சிப்பதுமே இன்றைய முஸ்லிம்களின் அரசியலாக உள்ளது.
எனவே முஸ்லிம்கள் சலுகைகளுக்கு அடிமைப்பட்டு இருக்கின்ற நிலையில், தமிழ் சமூகம் உரிமையை அடைகின்ற தங்களது கொள்கைகளில் உறுதியாக இருக்கின்றார்கள். இறுதியில் வெற்றிபெற போகின்றவர்கள் தமிழ் சமூகத்தினர். அதேநேரம் முஸ்லிம்கள் தொடர்ந்து அடிமைகளாக வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றது.