தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கூட்டணியாக இணைந்து செயற்பட்டால் மாத்திரமேதான் தமிழினத்துக்கு விடிவு


 -செல்லையா இராசையா.
எஸ்.அஷ்ரப்கான்-
மிழர்கள் தேசிய ரீதியில் பரந்து விரிந்த பலம் வாய்ந்த கூட்டு முன்னணியாக இணைந்தும், இணங்கியும் ஒருமித்து இயங்குவதன் மூலமாக மாத்திரமே தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
காரைதீவில் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று (04) வெள்ளிக்கிழமை பேசியபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் இங்கு மேலும் குறிப்பிடும்போது,
தமிழ் தலைமைகள் அனைத்தும் தமிழர்களின் தலைமைகள் என்கிற அடிப்படையில் ஒரு குடையின் கீழ் ஒன்றித்து செயற்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். மலையகம், கொழும்பு, வடக்கு, கிழக்கு ஆகியன அடங்கலாக தாயகம் பூராவும் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் வேறுபட்டும், மாறுபட்டும், கூறுபட்டும் செயற்படுவதை விடுத்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்களாக இயைந்து முன்னோக்கி செல்ல வேண்டி உள்ளது. வடக்கு, கிழக்கு என்கிற வட்டத்துக்குள் மாத்திரம் தமிழ் தேசியம் முடங்கி கிடக்க முடியாது. அவ்வாறு முடங்கி கிடப்பதால் நாம் இன்றும் சிங்கள், பௌத்த பெருந்தேசிய பேரினவாத சக்திகளுக்கு அடங்கி கிடக்க நேர்ந்து உள்ளது என்பது கடந்த கால அனுபவ பாடங்கள் ஆகும்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினையின் மூலாதாரமும் சிங்கள பௌத்த பெருந்தேசிய பேரினவாதமே ஆகும். அது அபிவிருத்தி சார்ந்த விடயமாக இருந்தாலும் சரி, உரிமை சார்ந்த விடயமாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் பொருந்தி நிற்கின்றது. தமிழர்கள் என்கிற அடையாளம் உள்ள அனைவரையுமே சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய அரக்கன் கொன்று தின்று கொண்டிருக்கின்றான். நாம் இனியும் ஒன்றுபடாது போனால் மீண்டும் ஒரு பாரிய முள்ளிவாய்க்கால் பேரழிவு வேறு வடிவங்களில் இடம்பெற்று இந்நாட்டில் தமிழர் என்கிற இனமே விரைவில் இல்லாமல் செய்யப்பட்டு விடும்.
மலையகம், கொழும்பு ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மக்களுக்கு பிரத்தியேக பிரச்சினைகள் இருக்கின்றன. அவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்து வித்தியாசமானவையாக உள்ளன. 1972 ஆம் ஆண்டு தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய முக்கிய மூன்று தமிழ் கட்சிகளும் சேர்ந்து தமிழர் கூட்டணி என்கிற அமைப்பை உருவாக்கின. இதன் கூட்டு தலைவர்களாக எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் கூட்டு தலைவர்களாக செயற்பட்டனர். இதுவே பிற்பாடு 1976 இல் தமிழர் விடுதலை கூட்டணியாக பெயர் மாற்றம் பெற்றது. வரலாற்று பிரசித்தி வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் பங்கேற்று இருந்தார். இருப்பினும் ஆன்றைய சூழ்நிலையில் மலையக மக்களின் பிரத்தியேக பிரச்சினைகளை முன்னிறுத்தியவராக புதிய வியூகம் வகுத்து செயற்பட்டார். அவ்வாறான போக்கு அன்றைய் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருந்திருப்பினும்கூட சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானது அல்ல. மேலும் அபிவிருத்தி, உரிமை ஆகிய இரண்டுமே தமிழர்களுக்கு ஒருமித்த தேவைகளாக உள்ள கால கட்டம் இது. தமிழ் தேசிய உணர்வில் அமைச்சர் மனோ கணேசன் எந்த வகையிலும் குறைவானவர் அல்லர் என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
தேர்தல் ஆண்டாக புதிய வருடத்தை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகிய மூன்று முக்கிய தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கின்ற சக்திகளாக தமிழர் தரப்பு இருக்க வேண்டும் என்றால் நான் சொல்கின்ற தமிழர் கூட்டு முன்னணி அத்தியாவசியமானதாக உள்ளது. அதே போல பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் குறைந்து கொண்டு செல்கின்ற தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் பிடித்து வைத்திருக்கவும் இவ்வாறான கூட்டு முன்னணி அவசியமானதாக இருக்கின்றது. தமிழர்கள் சர்வதேச சமூகத்துக்கு ஒரு குரலில் ஒலிக்க வேண்டும் என்றாலும் இக்கூட்டு முன்னணி உதயமாகி வேண்டி இருக்கின்றது. இக்கூட்டு முன்னணி மூலமாகவே பிரமாண்ட அழுத்த குழுவாகவும் தமிழர் தரப்பு செயற்பட முடியும். இதை தமிழ் மக்கள் என்றைக்கோ உணர்ந்து விட்டனர். ஆனால் தமிழ் தலைவர்கள்தான் பூனைக்கு யார் மணி கட்டுவது? என்று சிந்தித்து கொண்டு உள்ளனர். இவ்வாறான ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க தமிழ் தலைவர்கள் எல்லோரும் இது வரைக்குள் கனவு கண்டிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு ஆகும்.
சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய சக்திகளின் வெற்றி என்னவென்றால் தமிழ் கட்சிகளை பிரித்து வைத்திருப்பதுதான். எனவே குறைந்த பட்சம் தேர்தல் கூட்டணியாகவாவது தமிழர் சக்திகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமும், கட்டளையும் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -