இலங்கை யாழ் மண்ணில் கொண்டாட இலங்கை கிளை ஏற்பாடு....
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் அவர்களது அறுபதாவது பிறந்த தினம் எதிர்வரும் பதினான்காம் தேதி ஆகும். (ஜனவரி 14) கடந்த 30 வருட காலமாக ஜெர்மன் நாட்டில் வாழ்ந்து வரும் திரு. கணேசலிங்கம் அவர்கள் இந்த வருடம் தனது பிறந்த தினத்தை மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் இலங்கைக் கிளை ஒழுங்கு செய்து வருகின்றது. திரு கணேசலிங்கம் அவர்கள் தனது 60 வருட கால வாழ்வில் சுமார் 28 வருடங்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து பல்வேறு பணிகளையும் அவர் ஆற்றி வருகின்றார் . வடக்கில் புகழ்பூத்த புங்குடுதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மிக நீண்டகாலமாக ஜெர்மனியில் வசித்து வந்தாலும் தான் பிறந்த புங்குடுதீவு மண்ணை எப்போதும் மறந்து விட மாட்டார் அங்குள்ள ஆலயங்களுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் தன்னாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றார் .
அத்துடன் இலங்கை வடபகுதி மற்றும் கிழக்கு மலையக மக்களுக்காக பல்வேறு சேவைகளை அவர் எவ்விதமான பிரச்சாரமும் இன்றி ஆற்றி வருகின்றார். உலகத்தில் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் பணியில் கடந்த 30 வருடங்களாக தன்னை முழுநேரமாக அற்பணித்து பணியாற்றி வரும் இவருக்கு பல்வேறு விருதுகளும் பட்டங்களும் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு மிகவும் சிறப்பாக அதுவும் யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து நடத்துவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் இவர் முதன்மையானவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்னலம் கருதாது பிறருக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் ஒரு உயர்ந்த மனிதருக்கு அவரது அறுபதாவது பிறந்த தினத்தை இலங்கையிலே மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கு இலங்கை கிளையினர் ஆன நாங்கள் தீர்மானித்திருந்தோம்..
அவரது விருப்பம் கிளிநொச்சி மாநகரிலே தனது பிறந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்பதாக இருந்தது . ஆனால் எவரும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக கிளிநொச்சி மாநகர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக தனக்கு அத்தகையதொரு விழா எதுவும் தேவையில்லை என்றும் அதற்கு செலவிடும் தொகையை தன்னால் வழங்கப்படும் ஒரு தொகையையும் சேர்த்து கிளிநொச்சியில் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் கணவனை இழந்த குடும்ப தலைவிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இத்தகைய அன்பு மற்றும் பண்பு கொண்ட மாமனிதரின் வேண்டுகோளுக்கிணங்க மிக பிரம்மாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிறந்த தினவிழா மிகவும் இரத்தினச் சுருக்கமாக முக்கிய சில பிரமுகர்களுடன் ஒரு சிறு ஒன்று கூடலாக யாழ்ப்பாணத்திலே நடத்துவதற்கு இலங்கை கிளையினர் தற்போது தீர்மானித்துள்ளனர். அதற்கமைய பிறந்த தின விழா ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்திலே மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் ஹோட்டலில் எதிர்வரும் 19 1 2017 சனிக்கிழமை மாலை நாலு முப்பது மணிக்கு நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உலக கிளைகளின் அங்கத்தவர்களுக்கு அறியத்தருகின்றோம்.
இந்த பிறந்ததின ஒன்றுகூடல் நடைபெறும் தினத்தன்று உலக கிளைகளின் பிரமுகர்கள் தமது வாழ்த்துக்களை எமது பொதுச் செயலாளர் நாயகத்திற்கு தெரிவிக்கலாம் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்