பைசல் காசிம் நடவடிக்கை
திஹாரி மத்திய மருந்தகத்தில் பல உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 கோடி 50 லட்சம் ரூபா நீதியை வழங்குவதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த மருந்தகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் அங்கு நிலவும் குறைகள் பற்றி ஆராய்ந்தார்.அனைத்துக் குறைகளையும் கேட்டறிந்துகொண்ட அவர் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக மேற்படி தொகையை ஒதுக்குவதாக மருந்தக நிர்வாகத்திடம் வாக்குறுதி வழங்கி இருந்தார்.அந்த வாக்குறுதிக்கு அமைவாக மேற்படி தொகையை வழங்குவதற்கு இப்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் பைசல் காசிம் கூறுகையில்;எமது ஆட்சியின்போதே நாட்டில் சுகாதாரத் துறையில் தன்நிறைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.அதற்கு ஏற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம்.வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்துத் தட்டுப்பாடுகளையும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்து வருகின்றோம்.
மருந்து பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலைகளுக்குத் தேவையான கட்டட வசதிகளையும் வைத்திய கருவிகளையும் வழங்கி வருகின்றோம்.தொற்றா நோயை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை இன்னொரு புறத்தில் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில்,திஹாரி மத்திய மருந்தகத்தில் நிலவுகின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அதைத் தரமிக்க மருந்தகமாக மாற்றி அமைக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.அதற்காக 2கோடி 50 லட்சம் ரூபா நிதியை வழங்கவுள்ளேன்.-என்றார்.