பைசல் காசிம் குற்றச்சாட்டு
தான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில் தனது அபிவிருத்தியின் வேகம் 50 வேகம் குறைவடைந்துள்ளது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.இடம்பெற்ற சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:
நிந்தவூரில் பேட்மின்டன் கோர்ட் ஒன்றை ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணித்துள்ளேன்.நிந்தவூர் பிரதேச சபையில் புதிய ஆட்சி அமைவதற்கு முன்பே இந்த கோர்ட்டை நிந்தவூர் பிரதேச செயலகத்திடம் பாரம் கொடுத்துவிட்டேன்.
பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அதைப் பாதுகாக்குமாறும் மக்களின் பாவனைக்கு விடுமாறும் நாம் கேட்டுக்கொண்டோம்.ஆனால்,எதுவும் நடக்கவில்லை.இதன் காரணமாக அந்த இடம் இப்போது தேசமடைந்துவிட்டது.கண்ணாடிகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இது மக்களின் பணம்.அனைவருக்கும் இதில் பங்குண்டு.இதைத் திருத்துவதற்காக நான் பணம் தருகிறேன்.அதற்கான மதிப்பீட்டைத் தாருங்கள் என்று பிரதேச சபையிடம் கேட்டேன்.இன்னும் தரவில்லை.இதைவிடப் பெரிய வேலை இருப்பதாக தவிசாளர் கூறி இருக்கின்றார்.
நிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சி வருவதற்கு முன் இருந்த எனது அபிவிருத்தி வேகம் 50 வீதம் குறைந்துவிட்டது.எனது அபிவிருத்திப் பணிகள் அனைத்துக்கும் இந்த சபை முட்டுக்கட்டை போடுகின்றது.
2 ஆயிரம் பேர் அமரக்கூடியவாறு பெரிய மண்டபம் ஒன்று கட்டப்படுகின்றது.அந்த மண்டபத்தை பாரமெடுக்கமாட்டோம் என்று பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.அவர்களால் பாரமெடுக்க முடியாவிட்டால் எங்களிடம் தந்துவிடுங்கள் நாங்கள் பாரமெடுத்து நடத்திக் காட்டுகிறோம்.
நிந்தவூரின் அபிவிருத்திக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.1500 லட்சம் ரூபா செலவில் வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.இவை செப்பனிட்டு முடிந்தால் இனி நிந்தவூரில் புனரமைப்பதற்கு வீதிகள் இருக்காது.இந்த வருடத்துக்குள் அந்த வீதிகள் அனைத்தும் செப்பனிட்டு முடிக்கப்படும்.
இதுபோல் இன்னும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.ஆனால்,எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் ஆதரவு கிடையாது.
மைதானத்தை புனரமைப்பதற்காக 300 லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது.இது தொடர்பில் பேசுவதற்காக நாம் தவிசாளரை அழைத்தோம்.அவர் மறுத்துவிட்டார்.மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவோம்.அவர் மீண்டும் வரமறுத்தால் சபை உறுப்பினர்களை அழைத்து வேலையைத் தொடங்குவோம்.
இன்னுமின்னும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் சொற்பமானது.அதற்குள் எமது அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் முடித்தாக வேண்டும்.2020 ஜூன் வரைதான் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றால்தான் ஜூன் வரை நாடாளுமன்றம் இருக்கும்.இந்த வருடம் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும்.அதில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தால் ஜூன் மாதத்துக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.இதையெல்லாம் கவனத்தில் எடுத்துத்தான் நான் மிக வேகமாக வேலை செய்துகொண்டு இருக்கின்றேன்.-என்றார்.