தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறபுக் கல்லூரிகளின் வகிபாகம்

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா
பிரதித் தலைவர்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
கில இலங்கை அறபுக் கல்லூரிகள் ஒன்றியம் கடந்த ஜனவரி 19, 20 ஆகிய தினங்களில் தஸ்கர அல்ஹக்கானிய்யா அறபுக் கல்லூரியில் “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறபுக் கல்லூரிகளின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் மாநாட்டில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய கருப்பொருள் உரையின் சுருக்கம்.
இலங்கையில் அறபுக் கல்லூரிகளின் தோற்றம் சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. வரலாறு நெடுகிலும் இக்கல்லூரிகள் இத்தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகித்துள்ளன என்ற உண்மை உரத்துச் சொல்லப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்றால் என்ன?
தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்றால் ஒரு தேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, மனித வள அபிவிருத்தி போன்றவற்றில் நாம் காணும் நேர்மறையான மாற்றம் என சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தலாம். அதிலும் குறிப்பாக மனித வள அபிவிருத்தியே தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பிரதான இடத்தை வகிக்கிறது. ஏனெனில், இன்றைய உலகின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு முதலானவை தொடர்பில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாக விளங்குவது பண்பாட்டு வீழ்ச்சியாகும். இந்த உண்மை புரியப்பட வேண்டும். இன்று உலகிற்கு பொதுவாகவும் எமது தேசத்துக்கு குறிப்பாகவும் தேவைப்படுவது ஆன்மிக, ஒழுக்க, பண்பாட்டு ரீதியிலான வழிகாட்டல்களாகும்.
ஒரு நாட்டில் உள்ள பாடசாலைகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களதும் பிரதான பணி நல்ல மனிதர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆன்மிகம், பண்பாடு, ஒழுக்கம், அறிவு, ஆரோக்கியம் நிறைந்த ஆளுமை கொண்ட மனிதர்களை உருவாக்குவதே அவற்றின் இலக்காக இருக்க வேண்டும். இதுவே உண்மையான மனித வள அபிவிருத்தி ஆகும்.

அறபுக் கலாசாலைகளும் மனித வள அபிவிருத்தியும்
நல்லொழுக்கமும் பண்பாடும் உள்ள ஒரு தலைமுறையை உருவாக்குவதே அறபுக் கலாசாலைகளின் தார்மிக கடப்பாடாகும். அல்லாஹ்வின் அருளால் அன்றிலிருந்து இன்றுவரை அதனை இலக்காகக் கொண்டே அறபுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அறபுக் கல்லூரிகளின் பாடத்திட்டமானது உடல், அறிவு, ஆன்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையிலும் ஆன்மிகம், பண்பாடு, அறிவு, ஆரோக்கியம், உளவியல் போன்ற அனைத்திலும் ஒரு மாணவனை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பி ஏவல்களை எடுத்து நடந்து விலக்கல்களை முற்று முழுதாக தவிர்ந்து வாழ்வதோடு அவற்றை பிறருக்கு போதித்து சமூகத்தை வழிநடத்தும் இறையடியார்களை அறபுக் கலாசாலைகள் உருவாக்குகின்றன. இதன் மூலம் அவை சிறந்த மனிதர்களை இந்நாட்டுக்கு வழங்குகின்றன. சிறந்த மனிதர்களே தேசத்தின் நற்பிரஜைகள். இதனை “சிறந்த இறையடியான் = சிறந்த மனிதன் = நற்பிரஜை” எனும் சமன்பாடு தெளிவாக விளக்குகிறது.
ஆகவே, அறபுக் கலாசாலைகள் நற்பிரஜைகளை உருவாக்குகின்றன. எப்போதும் நற்பிரஜைகளே தேச நிர்மாணத்திற்குப் பங்களிப்புச் செய்வர்.

நற்பிரஜைத்துவம்
நற்பிரஜைத்துவம் என்பது ஒருவர், தான் ஒரு பிரஜை என்ற வகையில் தனது வகிபாகத்தை முறையாகவும் சரியாகவும் நிறைவாகவும் நிறைவேற்றுவதைக் குறிக்கும். அந்த வகையில் நற்பிரஜை என்பவர்,

- பிறரையும் அவர்களது உடமைகளையும் மதிப்பவராக இருப்பார்.

- பிறருக்கு உதவுபவராகவும் பரிவு காட்டுபவராகவும் இருப்பதோடு பிறருடைய நலனுக்கு முன்னுரிமை வழங்குவார்.
- பிறருடைய கருத்துக்களை செவிமடுப்பார்

- உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவார்.

- சூழலை மதிப்பார்; அதற்கு எத்தகைய பங்கமும் விளைவிக்க மாட்டார்.

- சிரமப்பட்டு உழைப்பார்.

- பண்பாடாகவும் இனிமையாகவும் நடப்பார்.


அத்தோடு நற்பிரஜைத்துவத்தின் கருப்பொருட்களாக பின்வரும் ஆறு அம்சங்கள் நவீன காலத்தில் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

1. நாணயமாக நடத்தல் (Honesty)
2. தயவு காட்டல் (Compassion)
3. மதித்தல் (Respect)
4. பொறுப்புணர்ச்சி (Responsibility)
5. துணிச்சல் (Courage)
6. தேசப்பற்று (Patriotism)
இவற்றை வாழ்வில் கடைப்பிடிக்கும், போதிக்கும் நல்ல மனிதர்களை அறபுக் கல்லூரிகள் உருவாக்குகின்றன. என்றாலும், மேற்படி அம்சங்களில் குறிப்பாக தேசப்பற்று தொடர்பாக சிறந்த தெளிவை பெற்றிருப்பதானது அறபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளைப் பொறுத்தவரையில் மிக அத்தியாவசியமானதும் காலத்தின் தேவையுமாகும். ஏனெனில், தேசப்பற்று தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டில் போதிய தெளிவின்மை இன்று உணரப்படுகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் தேசப்பற்று
தேசப்பற்று நற்பிரஜைக்குரிய அடிப்படைப் பண்பாடாகும். தேசப்பற்று என்பது நாட்டின் மீதான பற்றையும் விசுவாசத்தையும் குறிக்கும். தேசப்பற்று என்பது மனித இயல்பாகும். இதில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என்ற வேறுபாடு இல்லை. ஏனெனில் நபியவர்களும் அவர்களுடைய தோழர்களும் தமது தாயகமான மக்கா மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தனர்.

"பூமியில் எனக்கு மிகவும் விருப்பமானது மக்காவாகும். எனது சமூகம் என்னை அங்கிருந்து வெளியேற்றாதிருந்தால் அதல்லாத இன்னொரு இடத்தில் நான் குடியேறி இருக்கமாட்டேன்" என மக்காவைப் பார்த்து ஹிஜ்ரத் செல்லும்போது நபிகளார் கூறிய வார்த்தைகள் இஸ்லாத்தின் பார்வையில் புவியியல் கண்ணோட்டத்தில் ஒரு தேசத்திற்கு பெறுமானம் உண்டு என்பதைக் காட்டுகிறது.

சகோதரத்துவத்தின் வகைகள்

1. இஸ்லாமிய சகோதரத்துவம்: முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்பது இஸ்லாம் கூறும் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள் ஆதாரமாக இருக்கின்றன.
"முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள். எனவே (பிணக்குகள் ஏற்படும்போது) அவர்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள்." (அல்குர்ஆன் 49: 10)

"...அவனதுஅருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள்." (அல்குர்ஆன் 3: 103)

"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான்" (புகாரி)

2. மனித சகோதரத்துவம்: மனிதர்கள் அனைவரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியினர் என்ற வகையில் உலகில் வாழும் ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு சகோதரரே.
"மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்." (அல்குர்ஆன் 4:1)

"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்." (அல்குர்ஆன் 49:13)
"நீங்கள் அனைவரும் ஆதமின் சந்ததியினர். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்." (அபூதாவூத்)
3. தேசம், இனம்சார் சகோதரத்துவம்: ஓர் இனத்தை சார்ந்தவர்கள் அல்லது ஒரு மொழி பேசுபவர்கள் அல்லது ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாவர். நபிமார்கள் பலரை அல்குர்ஆன் அறிமுகம் செய்யும்போது அவர்களை அந்தந்த இனத்தைச் சார்ந்தவர்களின் சகோதரர்கள் என்றே பேசுகிறது.
"அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?" (அல்குர்ஆன் 26: 106)
"அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?" (அல்குர்ஆன் 26: 142)

"அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?" (அல்குர்ஆன் 26: 161)

"மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை அனுப்பினோம்." (அல்குர்ஆன் 29: 36)

அந்த வகையில், ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் வேறுபட்ட உறவுகளும் தொடர்புகளும் இருக்கும்.

உதாரணமாக, பிறந்த ஊருடனான உறவு, தான் சார்ந்த பிரதேசத்துடனான உறவு, தனது தேசத்துடனான உறவு, தனது தேசம் அமைந்துள்ள பிராந்தியம், கண்டத்துடனான உறவு, தனது மார்க்கம் சார்ந்த உறவு, தனது சமூகத்துடனான உறவு, தான் சார்ந்த மார்க்கத்தைப் பின்பற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவு, உலகளாவிய மனித சமூகத்துடனான உறவு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
உண்மையில் பிரஜைகள் என்ற வகையில் உருவாகும் உறவானது மதம், இனம், மொழி முதலான அனைத்து வரையறைகளையும் கடந்ததோர் உறவாகும்.
இங்கு "அல்வலாஉ வல்பராஉ" எனும் கோட்பாட்டை பிழையாக புரிந்து, முஃமின்களை மாத்திரமே தங்கள் நேசத்துக்குரியவர்களாக எடுத்து முஸ்லிம் அல்லாதவர்களை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி வாழ்வதோடு முஸ்லிமல்லாதவர் ஆட்சி செய்யும் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்வது இஸ்லாத்துக்கு முரணானது என்ற நிலைப்பாடு கொண்டவர்களுக்கு கட்டாயம் ஒரு செய்தியை சொல்லியாக வேண்டும். "தாய் நாட்டுக்கு விசுவாசமாக நடப்பது ஒருபோதும் இஸ்லாத்துக்கு முரணானது அல்ல" என்பதே அச்செய்தியாகும்.
நவீன இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷைக் பின் பைய்யாவின் பின்வரும் கருத்து இங்கு ஞாபகமூட்டப்பட வேண்டியது.

"தாய் நாட்டுக்கு விசுவாசமாக நடப்பது, அது ஷரீஆவின் வரம்புகளுக்கு உட்பட்டிருந்தால் ஒருபோதும் மார்க்கத்துக்கு விசுவாசமாக நடப்பதற்கு முரணானது அல்ல. இங்கு விசுவாசமாக நடப்பது உயர்ந்த பெறுமானங்களுக்கு விசுவாசமாக நடப்பதையும் தாய் நாட்டுக்கும் குடிமக்களுக்கும் நன்மை செய்வதையும் குறிக்கிறது. அது ஷரீஆவும் மனித பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளும் அம்சமாகும்" (கிதாபுல் வலா பைனத்தீனி வத்தவ்லா)
ஆனால், தாய் நாட்டின் மீதான விசுவாசமும் "தீன்" மீதான விசுவாசமும் முரண்படும்போது தீனுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நற்பிரஜைத்துவம் எனும் உறவுக்கு வலுவூட்டும் இஸ்லாமியக் கோட்பாடுகள்
மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒரு உம்மத். ஓர் இறைவனின் அடிமைகள் என்ற உணர்வு எம்மோடு எப்போதும் ஒன்றித்து இருக்க வேண்டும்.
v அனைவருக்கும் நலன்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் கவலைகள் ஒரே வகையானவை:
இவற்றில் முஸ்லிம்-காபிர், ஏழை-பணக்காரன், அரசன்-குடிமகன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்றெல்லாம் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. மனிதன் என்ற உணர்வு மாத்திரமே எம்மை இந்த பார்வையை வழங்கி பிறருக்கு உதவும் எண்ணத்தை வழங்கும்.

v நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம்:

யாராக இருந்தாலும் நீதியாக நடக்குமாறு இஸ்லாம் பணிக்கிறது. முஸ்லிம் அல்லாதவர் என்ற காரணத்துக்காக ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுவது ஷரீஆவுக்கு முற்றிலும் முரணானது.

v மனித இன ஒற்றுமையின் அவசியம்:
மனிதர்கள்தங்களுக்கு மத்தியில் சண்டை சச்சரவுகள் இன்றி ஐக்கியமாக இருப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. அதற்காக பாடுபடுவது உயர்ந்த பணியாக நோக்கப்படுகிறது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எமது மூதாதையரின் பங்களிப்பு

இலங்கை முஸ்லிம்கள் சமாதான விரும்பிகள். வரலாறு நெடுகிலும் அவர்கள் இந்நாட்டில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய கோட்பாடுகளைப் பேணிய வகையில் எல்லா சமூகங்களுடனும் பொதுவாகவும் சிங்கள பௌத்தர்களுடன் குறிப்பாகவும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். அதாவது நற்பிரஜைகளாக வாழ்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். இது பற்றி வரலாற்றுத் துறைப் பேராசிரியை லோனா தேவராஜா எழுதிய "The Muslims of Sri Lanka One Thousand Years of Ethnic Harmony 900-1915" எனும் நூல் இலங்கை முஸ்லிம்களின் சகவாழ்விற்கும் தேசிய பங்களிப்புக்கும் ஆதார பூர்வமாக சாட்சி பகர்கின்றது.
அந்த வகையில், இந்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எமது முன்னோர்கள் வழங்கிய மகத்தான பங்களிப்புக்கள் ஆவணங்களாக தொடுக்கப்பட்டு இந்நாட்டில் வாழும் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அறபுக் கலாசாலை நிர்வாகிகளின் பொறுப்பு
தேச நிர்மாணத்திற்கு பங்களிப்புச் செய்தல், நற்பிரஜையாக வாழ்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் எமது சமூகத்துக்கு மேலும் தெளிவூட்டும் வகையில் அறபுக் கலாசாலைகளின் கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய சில பாடங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

- பிக்ஹுத் தஆயுஸுஸ் ஸில்மி (Peace Studies)
- பிக்ஹுல் முவாதனா அஸ்ஸாலிஹா (Good Citizenship)
- பிக்ஹுல் அகல்லிய்யாத் (Fiqh of Minorities)
- பிக்ஹுல் வாகிஃ (Fiqh of Contemporary Affairs)

எனவே, மேற்குறித்த தெளிவோடு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிக அத்தியாவசியமான மனித வள அபிவிருத்திக்கு அறபுக் கலாசாலைகள் ஆற்றி வரும் மகத்தான பங்களிப்புக்களை அவை தொடர்ந்தும் செவ்வனே நிறைவேற்ற வல்ல அருள் புரிவானாக.

தொகுப்பு: அஷ்ஷெய்க் ஹஸ்ஸான் ஸுலைமான் (நளீமி)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -