இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11) திங்கட்கிழமை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டு அவரது பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ. அப்துல் பஸீர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி உள்ளிட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் நிர்வாக சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமைப்படுத்தி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
அதற்கமைவாக இதன்போது பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்தி தேவைப்பாடு தொடர்பில் கேட்டறியப்பட்டு அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை தான் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும் தனது அமைச்சினால் இப்பிரதேசத்தில் காபர்ட் வீதிகள் அமைத்தல், உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாக புனரமைப்புச் செய்தல், கிராமிய பாலங்களை புனரமைத்தல், பல்தேவைக் கட்டடங்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதான அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற கம்பெரலிய வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.