கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; தென்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம்


இதுவே தனது கனவு என்கிறார் பைசல் காசிம் 
''அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஒன்றும் அதனைத் தொடர்ந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் ஒன்றும் தொடங்குவதுதான் எனது கனவு.இதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்து வருகிறேன்.''

இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை [10.02.2019 ] இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடு மற்றும் புதிய விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்:
நான் சுகாதார பிரதி அமைச்சராக ஆன பின் சம்மாந்துறை வைத்தியசாலையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த வைத்தியசாலைக்கு கட்டடம் ஒன்று தேவை என்று அப்போது என்னிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது.தருவதாக அன்று வாக்குறுதி வழங்கினேன்.இன்று அதை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் இருக்கும்போதே இந்தக் கட்டடத்துக்கான வரை படம் வரையப்பட்டது.அதைக் கட்டி முடிப்பதற்காக இஸ்ரேல் நிதி கிடைக்கவுள்ளது என்றும் சொல்லப்பட்டது.ஆனால்,அந்த நிதி கிடைக்கவில்லை.
அதன் பின் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றி இந்த முயற்சியைக் கையில் எடுத்தோம்.இன்னும் இரண்டு வாரங்களில் எல்லா ஆதார வைத்தியசாலைகளுக்கும் பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.

சம்மாந்துறை வைத்தியசாலைக்கும் பணிப்பாளர் நியமிக்கப்பட்ட பின்னரே பணியைத் தொடங்குவது நல்லம் என்று நான் நினைக்கிறேன்.

நான் அமைச்சராக வந்தது முதல் இதுவரை 117 மில்லியன் ரூபா நிதியை இந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளேன்.இப்போது திறக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் பெண்களின் நலன்கருதி அமைக்கப்பட்டதாகும்.

பெண்கள் சிரமப்படுகின்றார்கள்.அவர்களுக்கு தனியாக ஒரு விடுதி வேண்டும் என்று டொக்டர் ஆபிதா என்னிடம் கூறினார்.அதற்கு ஏற்ப இந்தக் கட்டட வேலைகள் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குள் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டது.
இன்று அதை நாம் திறந்து வைத்துள்ளோம்.இந்த வைத்தியசாலையில் இருக்கும் கட்டடங்களுல் இந்தப் புதிய கட்டடம்தான் நவீனமானதாக இருக்கின்றது.
எனக்குக் கிடைத்துள்ள எனது அமைச்சைப் பயன்படுத்தி பல சேவைகளை நான் செய்துகொண்டு போனாலும்கூட அம்பாறை கரையோர மாவட்டத்தில் பொது வைத்தியசாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பதுதான் எனது திட்டம்.
அவ்வாறு பொது வைத்தியசாலை தொடங்கப்பட்டதன் பின் அதை போதனா வைத்தியசாலையாக மாற்ற வேண்டும்.அதன் பின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தைத் தொடங்க வேண்டும்.இது எனது கனவு.
வைத்தியபீடத்தை அமைக்கும் திட்டத்தை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் என்னிடம் கூறினார்.நான் இப்போது வேண்டாம் என்றேன்.அதற்கு முன்பு போதனா வைத்தியசாலை ஒன்று தேவை என்பதையும் அந்த வைத்தியசாலையைத் தொடங்கிவிட்டு வைத்தியபீடத்தைத் தொடங்குவோம் என்றும் நான் அவரிடம் கூறினேன்.அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
கரையோர மாவட்டம் வைத்திய துறையில் தன்னிறைவு அடைய வேண்டும்.இதய சத்திர சிகிச்சைக்கு நாம் யாழ்ப்பாணம் அல்லது பொலநறுவை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்யும் வைத்தியசாலையாக மாற்ற வேண்டும்.
இருக்கின்ற ஒரு வருடத்துக்குள் என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்.இவ்வாறு என்னால் செய்ய முடிகின்றமைக்குக் காரணம் எமது கட்சிதான்.இந்தக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்னை பிரதி அமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சராகவும் ஆக்கினார்.

பைசல் காசிம் என்ற தனி மனிதன் மூலம் இந்த சேவை இடம்பெறவில்லை.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி மூலமாகவே இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.-என்றார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -