கல்குடா அரசியலில் பலர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். சிலர் தங்களின் பணிகளினூடாக மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் இன்று வியாபாரமாகப் பார்க்கப்படும் சூழலில், ஒரு சிலரால் மட்டுமே அதனை சேவையாக, வணக்கமாக பார்க்கவும் முன்னெடுக்கவும் முடிகிறது.
அவ்வாறு அரசியலை சேவையாக, வணக்கமாக முன்னெடுக்க வந்தவர் தான் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ். குறுகிய காலத்தில் கல்குடா அரசியலிலும் கல்குடா மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்துக் கொண்டவர் றியாழ் என்பதை மறுதலிக்க முடியாது.
யார் இந்த றியாழ்?
மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடாத்தொகுதியிலுள்ள மீராவோடை எனும் அழகிய கிராமத்தில் ஹயாத்து முஹம்மது, அலிமாகண்டு தம்பதிகளுக்கு 1976ம் வருடம் பெப்ரவரி மாதம் 06ம் திகதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.
சிறு வயதில் தந்தையை இழந்த இவர், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது ஆரம்பக்கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தி பெற்று கொழும்பு றோயல் கல்லூரி நுழைவுப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தனது இடை, உயர்தரக்கல்வியை இலங்கையின் தலைசிறந்த பல விற்பன்னர்களை உருவாக்கிய கொழும்பு றோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.
பல சவால்களுக்கு மத்தியில் கல்வியைத்தொடர்ந்த அவர், உயர் கல்வித்துறையில் MBA பட்டம் பெற்றதுடன், உயர் கற்கைத்துறையிலும் FCA.ACMA பட்டங்களைப் பெற்று கல்வியில் தான் நினைத்த உச்சத்தை தொட்டார். அத்தோடு, எமது பிரதேசத்தின் முதலாவது பட்டயக்கணக்காளர் என்ற கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.
இவரிடம் கணப்பட்ட கல்வியறிவு, திறமை, நேர்மை காரணமாக இலங்கையில் சுமார் 4000 கோடி ரூபாய்களை முதலீடு செய்திருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்.
அரசியல் பிரவேசம்
றியாழின் அரசியல் பிரவேசமானது கடந்த 2015ல் நடைபெற்ற பொதுத்தேர்தலாகும். இவர் இதற்கு முதல் எந்தக்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யவுமில்லை. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுமில்லை. அரசியல் பிரவேசம் அவருக்கு புதிய அனுவத்தைக் கொடுத்தது.
முஸ்லிம் சமூகத்திற்கு முகவரி தேடித்தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே தனது முதலாவது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். இவ்வரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது, தனது நிறுவனத்தில் பிரதம நிதி அதிகாரியாக (CFO) பதவி வகிக்கிறார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் அரசியல் அறிமுகம் பெறுகிறார்.
இவரை அரசியலுக்குள் அழைத்த போது, ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார். பின்னர் தன்னுடைய பிரதேசத்தில் நல்ல தலைமைகள் உருவாகுவதற்கான தடைகளும், தனது மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்றவும், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையைப்பெற்ற கட்சியின் தேசியத்தலைவரின் தொடர் அழைப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதல் முதலாக அறிமுகமானார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் அரசியலைப் பொறுத்தளவில் மூத்த அரசியல்வாதிகளாக ஹிஸ்புல்லாஹ். பஸீர் சேகுதாவூத், அலி சாஹிர் மௌலானா ஆகியோருடன் கல்குடாவில் பிரதியமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி ஆகியோரும் காணப்பட்டனர். இவ்வாறான நிலையில் அரசியலுக்கு புதியவராக பொதுத்தேர்தலை எதிர்கொண்டார்.
இத்தேர்தலில் றியாழுக்கு கடுமையான போட்டியாளாராக பிரதேச அரசியல்வாதியான பிரதியமைச்சர் அமீர் அலி காணப்பட்டார்.
றியாழ் கல்குடா அரசியல் காலத்திற்கு புதியவர் என்பதாலும், மக்களுக்கு நன்கு பரிச்சாத்தியமில்லாதவர், குறுகிய கால தேர்தல் பிரசாரம், கொலைப்பழி போன்ற காரணங்களால் வெற்றி தடுக்கப்பட்டாலும், மாற்றுத்தலைமையின் அவசியம் உணரப்பட்டதாலும், எதிரணியினர் மீதிருந்த அதிருப்தி காரணமாகவும், தனது சாதுவான பேச்சு, மற்றும் நடத்தைகளாலும் கல்குடா மக்களின் மனங்களை கொள்ளை கொண்டார். அதன் காரணமாக கணிசமானளவு வாக்குகளை இவரால் பெற முடிந்தது.
தேர்தலின் பின்...
கடந்த காலங்களில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர், வெற்றி பெற்றவர் கட்சி மாறிப்போனதுடன், அதன் பின்னர் வந்த தேர்தல்களில் தோல்வி கண்டவர்கள் அடுத்த தேர்தலுக்கு மாற்றுக்கட்சியில் சங்கமமாவதும், கட்சியை விமர்சிப்பதும் வழமையாக இருந்தது.
பத்தோடு பதினொன்றாக றியாழும் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தனது தொழிலைப் பார்த்துக்கொண்டு கொழும்போடு போய் விடுவார். கடந்த காலங்களில் நடந்தது போன்று அரசியலை விட்டும் போய் விடுவார் எனப்பலரும் எதிர்பார்திருந்த நிலையில், கடந்த கால முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் கல்குடா அரசியல் வரலாற்றை மாற்றியமைத்தார்.
தேர்தல் முடிந்து சில வாரங்களின் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கல்குடாவிற்கு வருகை தந்திருந்த றியாழை மக்கள் அமோக வரவேற்பளித்து வரவேற்றதுடன், தொடர்ந்தும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளதும், ஆதரவாளர்களினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தேசியபட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை றியாழுக்கு வழங்கி, கடந்த கால வாக்குறுதியை கட்சியின் தலைமை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிக் காணப்பட்டது.
ஏனனில், தேசியப்பட்டியல் வழங்குவதற்கு தகுதியான, தலைவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் உறுதியாக நம்பினார்கள். தலைவரின் செயற்பாடுகளும் தேசியப்பட்டியல் இம்முறை கல்குடாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவே கட்டியம் கூறியது.
ஆனால், இன்று வரை அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் போராளிகளுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் கடந்த காலங்களில் கட்சிக்கும் றியாழுக்கும் வாக்களித்த மக்களுக்கும்உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அதனைப்பெறுவதற்கான அழுத்தங்களை போராளிகளும், ஆதரவாளர்களும் தலைவருக்கு கொடுக்க முற்பட்ட போது, றியாழ் அவர்களே தேசியப்பட்டியல் தொடர்பாக தலைவர் எதிர்நோக்கும் சவால்களைத் தெளிவுபடுத்தி தலைவரை சங்கடத்திற்குள் உட்படுத்த வேண்டாம். தலைவர் மீது நம்பிக்கை வைப்போம். ஒரு நாள் உங்கள் அபிலாஷை தலைவரால் நிறைவேற்றப்படும் என்று தலைவர் மீதான நம்பிக்கையை கல்குடாவில் கட்டியெழுப்பினார்.
பதவிகளுக்காக போராளிகளையும், ஆதரவாளர்களையும் தூண்டிவிட்டு தக்க தருணம் பார்த்து அழுத்தங்களை தலைவருக்கு கொடுத்து காரியம் சாதிக்க முற்படுபவர்களுக்கு மத்தியில் றியாழ் விசித்திரமானவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
றியாழைப்பொறுத்தளவில் அரசியல் தொழிலில்லை. இறைவன் உதவியால் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் நிறுவனமொன்றில் உயர் பதவியிலும், பொருளாதார நிலையிலும் நல்ல நிலையிலிருந்து இருக்கிறார். இந்த அரசியலை மக்கள் பணியாக, சேவையாக முன்னெடுக்கிறார். தனது சொந்த வருமானங்களினூடாக அரசியலுக்கு வரும் முன்பு மறைமுகமாக பலருக்கும் உதவி செய்து கொண்டிருந்தார்.
அரசியலுக்கு வந்த பின்னர் தனது சொந்த பொருளாதாரத்தில் தான் இவ்வளவு காலமாக தனது அரசியல் பணிகளைச்செய்து வருகிறார். தேவையுடையவர் நாடி வருவதும் அவர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை மறைமுகமாகவும் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்.
கல்குடா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் காலத்துக்கு காலம் வேட்பாளர்கள், அமைப்பாளர்கள் தோன்றி மறைவதால் தொடரான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்சிப்போராளிகளும், ஆதரவாளர்களும் வழிநடாத்தப்படாததனாலும் வெளியூர் அரசியல்வாதிகள் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இங்கு தங்களுக்கு ஆதரவான குழுக்களை உருவாக்கி வைத்திருப்பதனாலும் கட்சி அரசியல் கட்டமைப்புகளை உருவாக்கி பணிகளை முன்னெடுப்பது கடினமாக இருந்ததுடன், தாங்கள் தான் கட்சியும் தலைவர்களும் என்ற தோரணையில் சிலரின் செயற்பாடுகள் கட்சியை சிதைத்துக் கொண்டிருந்தது. கட்சியைப் பொறுப்பேற்ற றியாழுக்கும் கட்சி கட்டமைப்பை உருவாக்கி, கட்சிப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தது.
றியாழைப்பொருத்தளவில் பல நாடுகளில் பல நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்த காலப்பகுதியில் பல நாட்டுக்காரர்களை வைத்து வேலைகளைச்செய்தவர். அவருக்கு கீழ் துறைசார் நபர்கள் பலரும் வேலை செய்திருக்கிறார். தற்போதும் பல துறைசார் நபர்கள் இவரின் கீழ் பணி செய்கிறார்கள். தனது செயற்பாடுகளைத்திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்ததன் விளைவால் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடிந்தது. இதன் காரணமாக பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றுத்திகழ்கிறார்.
அரசியலைப் பொருத்தளவில் பலரும் பல கோணங்களில் இருப்பார்கள். அவர்களை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்குவது கடினமான செயலாக இருந்த போதும், அதனைச்சிறப்பாக தனது தொகுதியில் முன்னெடுத்து கட்சியின் கட்டுக்கோப்பை உருவாக்கி, கடந்த மூன்றரை வருடங்களில் கட்சித்தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சினூடாக சுமார் 50 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதிகளை அபிவிருத்திப் பணிகளை கல்குடாவில் மேற்கொண்டதோடு, கல்குடா மக்களின் கனவாக இருந்த தூய குடிநீர்த்திட்டம் கட்டங்கட்டமாக கல்குடா முழுவதற்குமான பாரிய நீர் வழங்கல் திட்டமாக சுமார் 2000 கோடி ரூபாவில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தை கல்குடாவிற்கு கொண்டு வருவதில் றியாழ் இறுதிவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் எதிரணி அரசியல்வாதிகளால் கல்குடாப்பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லையென்ற விமர்சனக்குற்றச்சாட்டுகளை தனது காலப்பகுதியில் பல கோடி ரூபா அபிவிருத்திகளைக்கொண்டு வந்து முற்றுப்புள்ளி வைத்து மக்களின் தம்பிக்கைக்குப் பாத்திரமானார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை எதிர் கொண்ட அவர், தன்னை நம்பி கட்சி ஒப்படைத்திருக்கும் பொறுப்பைத்திறம்பட நிறைவேற்ற முயற்சி செய்தார். தங்களின் கடந்த காலப்பணிகளினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் செல்வாக்கை மதிப்பிடவும், எதிர்கால உரிமை, அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி வினைத்திறனாக முன்னெடுக்கவும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தத்தேர்தலைப் பயன்படுத்தினார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்குடாத்தொகுதியில் வாழைச்சேனைப்பிரதேச சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குமான வியூகங்களை வகுத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்.
இறுதி நேரத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தேர்தலில் கட்சியில் கட்டுப்பணம் செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில், சுயட்சைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தி தேர்தலை எதிர்கொண்டு பல சவால்களுக்கு மத்தியில், பிரதியமைச்சரின் அதிகாரங்களையும் தாண்டி அதிகாரமற்றவராக அதிக ஆசனங்களைப்பெற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனாலும் துரதிஸ்டவசமாக ஆட்சியமைப்பதில் உள்ளக முரண்பாடு, சதிகளால் கைநழுவிப்போனாலும் எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள். துரோகிகளைச் சந்திக்காது அரசியலில் சாதனைகளைப் படைக்க முடியாதென்பதை உணர்ந்திருப்பார்.
இந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த காலங்களை விடவும் அதிகரித்துள்ளது என்ற கணிப்பீட்டை தந்துள்ளது. இதனை அவதானித்த அரசியல் ஆசை கொண்ட சிலர் தாங்களும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாகப் போட்டியிட்டால் வெல்ல முடியும் என கனவில் உலாவருவதுடன், றியாழ் இருக்கும் வரை சாத்தியமில்லையெனக்கருதி முழுப்பழியும் அமைப்பாளர் றியாழ் மீதே சுமத்தி அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான சகல முயற்சிகளும் கன கச்சிதமாக முன்னெடுக்கிறார்கள்.
இவ்வாறான குழப்பங்களாலும், குழப்பம் விளைவித்தவர்கள் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்தும், தலைவரின் அனுமதி கிடைக்கவில்லை.
தலைவர் அரசியல் பயணத்தில் பல சவால்கள், துரோகங்களைக் கடந்து பயணிக்கின்றவர் என்ற அடிப்படையில் அவரின் அனுபவத்தை வைத்து இவ்விடயத்தின் நெளிவுசுளிவு அறிந்தவர் என்ற காரணத்தினாலும் றியாழை ஆசுவாசப்படுத்தி வருகிறார்.
அரசியல் என்பது வித்தியாசமான பணி. அதிலிருந்து பாடங்களைப்படித்து தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் நீண்ட தூரம் அரசியலில் பயணிக்கலாம் என்பதுடன், றியாழ் என்ற ஆளுமையை கல்குடா சமூகம் பயன்படுத்த வேண்டுமென்பதிலும் தலைமை தெளிவாக இருந்ததினாலும், குழப்பம் விளைவிப்பவர்களின் நோக்கங்களை அறிந்திருந்ததாலும் தொடர்ந்தும் கட்சிப்பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
றியாழைப் பொறுத்தளவில் பாரிய முதலீடு செய்திருக்கும் நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்து கொண்டு வேலைப்பழுவுக்கு மத்தியிலும் கட்சிப்பணியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார். இவ்வாறான நிலையில், அரசியல் பணியைத் தொடர்ந்து செய்வதில் சிலர் ஒத்துழைக்காது தொடராக இழுபறி நிலை காணப்பட்டால், அதனை முன்னெடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும்.
அதனாலேயே அரசியலிலிருந்து ஒதுங்கிட முடிவு செய்தும், அந்த முடிவை மக்களும் தலைவரும் ஏற்றுக் கொள்ளாததாலும் தன்னை நேசிக்கும் சமூகத்தின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முடியாது மீண்டும் இந்தப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.
இவ்வாறான ஆளுமைகளை கட்சி பயன்படுத்த வேண்டுமென்பதுடன், இப்படிப்பட்ட ஆளுமைகளுக்கான இடமும் கட்சிக்குள் வழங்கப்பட வேண்டும். றியாழைப் பொருத்தளவில் சிறுவயதிலிருந்து கல்வி கற்பதற்காக கொழும்பில் இருந்ததனால் அவர் எல்லா சமூகத்தினருடனும் பழகக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது.
அதனால் அவரால் சமூக நல்லிணக்கத்துடன் தேசிய ரீதியாக தனது பணிகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. ஒரு பிராந்தியத்திற்குள் இவ்வாறானவர்களை மட்டுப்படுத்தி விடாது, தேசிய ரீதியாக சமூகம் பயன்படத்தக்க வகையில் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் கட்சியும், தலைமையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கவும், அப்படியானவர்களைப் பாதுகாக்கவும் சுயநலன்களைக் கடந்து பொதுநலனுடன் செயற்படும் இளைஞர்களும் சமூகத்தலைவர்களும் முன்வர வேண்டுமென்பதுடன், ஆளுமை என்பது எளியவனை வலியவன் அடக்கியாள்வதில் இல்லை.
மாறாக, எளியவனை அரவணைத்துக் கொண்டு அவனுக்கு பாதுகாப்பளிப்பதிலையே இருக்கிறது. சாத்வீக அரசியல் சரி வராது. அதனைக் கைவிடுங்கள் என்று ஒரு தடவை சிலர் றியாழிடம் சொன்னார்கள். அப்போது றியாழ் உறுதியாகச் சொன்னார். தான் ஒரு போதும் தனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன். கல்குடாவில் கடந்த காலங்களில் அராஜக அரசியல் செய்தவர்கள் இன்று தோல்வி கண்டுள்ளார்கள். மக்கள் சாத்வீக அரசியலையே விரும்புகிறார்கள். அதனால் தான் நமக்கு அதிகமான வாக்குகளை அளிக்கிறார்கள் என்பது எனது நிலைப்பாடு. எனது அரசியல் நேர்மையான அரசியல் பயணமாக இருக்குமென்பதைத் தெளிவுபடுத்தினார்.
எமது எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு றியாழ் கல்குடா அரசியலில் நீடிக்க வேண்டும். அரசியலை தொழிலாக அல்லாமல் ஒரு வணக்கமாகச் செய்யும் எண்ணமுள்ள ஒருவராலே கல்குடாவுக்கான அரசியல் தலைமையாக செயற்பட முடியுமென்பதே சகலரது எதிர்பார்ப்பாகும்.
எனவே, தனது திறமையாலும் நேர்மையாலும் தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தை அடைந்தது போன்று அரசியலிலும் உயர்ந்த இடத்தையும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெறுவதற்கும் மனமார வாழ்த்துகிறேன்.