கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் இருவரும் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 ஊழியர்களும் பெரிய நீலாவணையில் வைத்து இன்று புதன்கிழமை பிற்பகல் தாக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபையின் பெரிய நீலாவணை பசளை உற்பத்தி நிலையத்திற்கு திண்மக்கழிவுகளை ஏற்றிச் சென்ற ட்ரம் ட்ரக் கனரக வாகனம் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதியை சேர்ந்த சிலரால் வழிமறிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதுடன் அதில் சென்ற ஊழியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த ட்ரம் ட்ரக் வாகனமும் அவர்களினால் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், ஆணையாளர் எம்.சி.அன்சார் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஸ்தலத்திற்கு விரைந்து, வாகனத்தையும் ஊழியர்களையும் மீட்க முற்பட்டபோது அங்கு திரண்டிருந்த கும்பல் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ராஜன், எஸ்.குபேரன் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது மாநகர சபை உறுப்பினர் ராஜனின் சேர்ட்டினுள் இருந்த சுமார் பத்தாயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முதல்வரினால் அங்கு அவசரமாக அழைக்கப்பட்டிருந்த கல்முனைப் பொலிஸாரினால் கூட இச்சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழ்நிலை காணப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், அங்கிருந்து மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொண்டார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சில ஊழியர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.