உணவகத்தில் கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையர்கள் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த மாதம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் இருந்த உணவகத்தில் ஏழு லட்சம் பணமும் மூன்று லட்சம் பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இக்கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவரை சாவகச்சேரி பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையின் அடிப்படையில் கொள்ளையிடும் போது அணிந்திருந்த உடை மற்றும் சுமார் மூன்று லட்சம் பெறுமதியான வீட்டு தளபாடங்கள் உட்பட மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந்த கொள்ளையின் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்டிருந்தனர்.