ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இங்கு தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தேவையை வென்றெடுக்கும் நோக்கில் நாங்களும் அவருடன் கைகோர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பற தேர்தல் தொகுதியின் பன்வில பிரதேசத்தில் கல்வல வீதி, விக்னேஸ்வரா வீதி, ஆயுர்வேத வீதி, ராக்ஷாவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு ஆகியவற்றில் 6 மில்லியன் ரூபா செலவில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பூர்த்திசெய்யப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டங்களை இன்று (03) மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
இப்போது தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. டொலர் பெறுமானம் அதிகரித்துள்ள நிலையில், வியர்வை சிந்தி உழைக்கின்ற உங்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவேண்டும். இவ்விடயத்தில் தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் களவாக ஒப்பந்தம் செய்யமுடியாது. தொழிற்சங்கள் பின்கதவால் ஊட்டங்களை பெறுவதாக இன்று ஊடங்களில் பகிரங்கமாக பேசப்படுகின்றன.
பாராளுமன்றத்திலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல், பின்கதவால் பிரதமரை அழைத்து ஒப்பந்தம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதன் பின்விளைவை இன்று அரசாங்கமும் உணர்ந்துள்ளது. திறந்தமுறையில் வெளிப்படையாக இதற்கான பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையை ஐக்கிய தேசியக் கட்சித்தான் தீர்த்துக்கொடுத்தது. அதுபோல, சம்பளப் பிரச்சினையை அவர்கள்தான் தீர்க்கவேண்டும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை திறந்த முறையில் நடத்தப்படவேண்டும். இதற்கான அழுத்தங்களை நாங்கள் பிரயோகிக்க வேண்டும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்துள்ள போராட்டம் வெற்றிபெற வேண்டும்.
51 நாட்கள் திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், நாங்கள் நாட்டை துண்டாடுவதற்கும், அரசியலமைப்பை சிதைப்பதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் அபாண்டமான பொய்களைச் சொல்லி அவர்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
பன்வில பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், ஒருசிலர் மாத்திரமே மக்களின் பெளதீக வள தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முன்னின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் வருபவர்களை, பின்னர் காணமுடியாதுள்ளது.
இப்பிரதேசத்தின் வளர்ச்சி என்பது மாணவர்களின் கல்வியில்தான் தங்கியுள்ளது. ஆரம்பத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பன்வில பாடசாலைகள் கல்வியில் வீழ்சியை சந்தித்துள்ளன. தற்போது புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கிவிடுவதற்கு அரசாங்கம் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு உங்களது பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
எஸ்.எல்.எஸ்.பி.சி, ஜே.ஈ.டி.பி. என்ற அரசாங்க தோட்டக் கம்பனிகளுக்கு ஏராளமாக காணிகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு வீடு கட்டுவதற்கென 7 பேர்ச் காணியை பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் அவரது கட்சியும் உங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.
இங்கு நல்ல தொழில் முயற்சியாளர்கள் இருந்தால், உங்களது பயிர்ச்செய்கை திட்டத்தை விவசாய திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் சமர்ப்பித்தால், தரிசு நிலங்களில் உங்களுக்கு 2 ஏக்கர் காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவேண்டும்.
நீங்கள் பட்டதாரிகளாக இருந்தால், அரச தொழில்வாய்ப்பை நம்பியிருக்காமல் சுயதொழிலொன்றை செய்வதற்கு எனது உயர்கல்வி அமைச்சு மூலம் 15 இலட்சம் ரூபாவை வட்டியில்லா கடன்முறையில் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
தொழில் முற்சியாளர்களை முன்னேற்றும் நோக்கில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா எனும் கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 மில்லியன் ரூபா வரை குறைந்த வட்டியின் கடன் பெறமுடியும். இதில் அரைவாசி வட்டியை அரசாங்கம் செலுத்துகிறது.
இந்த கடன்திட்டத்தை வழங்குவதில் சில வங்கிகள் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவற்றைத் தளர்த்தி இலகுவான முறையில் கடனை வழங்க வேண்டும். அவ்வாறு செயற்படாத வங்கிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பன்வில பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான எஸ்.ஏ. இத்ரீஸ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி. சில்வா, பிரதிப் பொது முகாமையாளர் மீகொட, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.