மிகப் பாரதூரமான தவறு ஒன்றைச் செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எண்மரும் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். நிம்மதியான செய்தி.
இவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை காட்டிய அனைவரையும் பாராட்ட வேண்டும்.
வழக்கு விசாரணை முடியும்வரை பிணை வழங்க முடியாத குற்றங்களில் ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டாவது தடவையிலேயே இவர்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதே என்பது ஆச்சரியமான விடயம்.
எமது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த மாணவர்களின் விடயத்தில் ஏனைய அமைச்சர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் விடுதலைக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் கோரியிருக்கலாம். ஆனால், அவர்களது கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்ட நிலையில், இறைவன் நாட்டம் மற்றும் வாதத்திறமை காரணமகவே இந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே உண்மை.
இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான (தொல்பொருள்) அமைச்சர் சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ இந்த மாணவர்களை விடுவிக்கும் விடயத்தில் கரிசனை காட்டவில்லை என்ற அப்பட்டாமன உண்மையையும் இங்கு கூறவேண்டும்.
இந்த மணவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார். குறித்த எட்டு மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையாவது விதிக்க வேண்டுமென்று வாதாடியதுடன் இவ்வாறு செய்வதன் மூலம்தான் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை எதிர்காலத்தில் தடுக்கவும் முடியுமென தெரிவித்திருந்தார்.
தொல்பொருள் திணைக்களத்துக்கும் பொறுப்பான அமைச்சரான சஜித் பிரேமதாச ஒரு தொலைக்காட்சியில் தோன்றி, இந்த மாணவர்கள் தொடர்பில் எவ்வாறான இறுக்கமாக மனப்போக்கை வெளிக்காட்டினாரோ அதே பிரதிபலிப்புடனேயே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் சட்டத்தரணியும் இந்த விடயத்தில் நிதிமன்றில் நடந்து கொண்டார்கள் என்பது எமக்குப் படிப்பினையாக அமைய வேண்டும்.
அமைச்சர் சஜித் பிரேமதாச போன்று வேறு சில சிங்கள அமைச்சர்களும் இந்த விடயத்தில் தங்களது இறுக்கத்தைக் காட்டினார்களே தவிர, நெகிழ்வுத் தன்மையை ஒரு துளியேனும் காட்டவில்லை.
மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த மாணவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
1.தண்டனை சட்டக் கோவையின் 120, 140 ஆம் அத்தியாயங்களின் கீழ் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டும்
2.தொல்பொருள் சட்டத்தின் 31 (B) பிரிவின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டுமாக மூன்று குற்றச்சாட்டுகள் இந்த மாணவர்கள் மீது சுமத்தப்பட்டு ஹொரவப்பொத்தான பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு மிக இறுக்கமான, கடுமையான நிலையில், இந்த மாணவர்களின் விடுதலை என்பது இறைவனின் நாட்டத்துடன் சட்டவாதத் திறமைக்குக் கிடைத்த வெற்றி மட்டும்தான் எனக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ரங்க சுஜீவ மற்றும் சப்ராஸ் ஹம்ஸா ஆகியோர் ஆஜராகியிருந்த நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் கடுமையான எடுகோள்களுடனான வாதத்திறனால் அந்த மாணவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களாக அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதற்கான வழி பிறந்தது.
சுமார் 45 நிமிடங்கள் வாதித்திட்ட சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், இவர்களை விடுவிப்பதற்காக கடந்த காலங்களில் இதனை ஒத்த வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மற்றும் கடந்த காலங்களில் இவ்வாறான வழக்குகளின் போது கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளை நீதிவானின் கவனத்துக்கு விரிவாகக் கொண்டு வந்திருந்தது மிகச் சிறப்பான அம்சமாகும்.
மேலும்..
1 மாணவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு சிறைத் தண்டனை வழங்கக் கூடாது
2. குற்றம் தொடர்பில் கைவிரல் பதிவுகளைப் பெறவோ அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படவோ கூடாது.
3. இந்த மாணவர்கள் இதற்கு முன்னர் எந்தக் குற்றங்களில் ஈடுபடாதவர்கள்.
4. குறித்த தொல்பொருள் இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என எந்த அறிவித்தலும் இடப்படவில்லை போன்ற பல விடயங்களை நீதிவான் முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் அனைத்து வாதங்களையும் கருத்தில் கொண்டு அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிவான், அவர்களுக்கு அபராதம் விதித்து வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார் என்பதே உண்மை.