கழிவுத் தேயிலையில் கலரைக் கலந்து விற்பனை செய்ய முயற்சிக்கக் கூடாது!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
அன்பின் ஷெய்க் ஹனீபா மதனி அவர்களுக்கு!ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பு வழங்கினால் சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று நீங்கள் கூறியுள்ளதனைப் படித்து கவலையடைந்த இந்நாட்டின் பல்லாயிரம் முஸ்லிம்களில் நானும் ஒருவன்.
நீதிவானையும் நீதிமன்றத்தையும் அவமதித்த ஒருவருக்கு நீதிவான்களால் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத்தானே ஞானசார தேரர் அனுபவிக்கிறார். தவிர, அளுத்கமையில் எங்கள் சமூகத்தின் மீது தனது இன சங்காரத்தை அரங்கேற்றியதற்கோ, வில்பத்துக்குள் சென்று முஸ்லிம்கள் அங்கு குடியேறுவதாகப் பொய் கூறி, அநியாயங்கள் செய்ததற்கோ அல்லது கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கோ இந்தத் தண்டனை வழங்கப்படவில்லை என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, எங்களோடு சம்பந்தப்படாத ஒரு விடயத்துக்காக, அதுவும் சட்டத்தையும் நீதியையும் அவமதித்மைக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு குற்றவாளியை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கூறுவதும், அவரின் விடுதலையினால் இந்நாட்டு முஸ்லிம்களே மகிழ்ச்சியடைவர் என நீங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாகவும் தெரிவிப்பது மிகத் தவறான விடயம்.
நானும் இந்த நாட்டு முஸ்லிம். ஆனால், ஞானசார தேரரின் விடுதலையால் நான் மகிழ்ச்சியடையப் போவதில்லை. மாறாக, இவரை விடுவிப்பதால் எனது சமூகத்துக்கு மீண்டும் அழிவுகள், அநியாயங்கள் ஏற்படுமோ என்ற மற்றைய முஸ்லிம்கள் போன்று நானும் அச்சப்படும் நிலையில், அவரது விடுதலையில் முஸ்லிம்கள் எவ்வாறு மகிழ்ச்சியடையும்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் ஹனீபா மதனி அவர்களே!
சிலவேளைகளில், தற்போது எமது சமூகத்தின் மீதான அநியாயங்கள் ஓரளவு தணிந்திருப்பதற்கு ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டதாலோ என்னவோ என்று நம்பி ஓரளவு நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் விடுவிக்கப்பட்டால் எப்படி மகிழ்ச்சியடைய முடியும் ஹனீபா மதனி அவர்களே!
அண்மைக்கால வரலாற்றில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள், அநீதிகள் அனைத்துக்கும் முதல் வாசலாக அமைந்தது ஞானசார தேரரின் பொதுபல சேனா என்பதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். பொதுபல சேனாவின் வழியை ஒட்டியே ஏனைய சில சிங்கள அமைப்புகளும் எம்மைச் சீட்டிப் பார்ப்பதற்காக புதிதாக தலைதூக்கின என்பதே எனது கருத்து.
எனவே, எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அநியாங்களையும் அட்டூழியங்களையும் செய்தார் என நம்பப்படும் ஒருவ,ர் இவற்றுக்கெல்லாம் குற்றவாளியாகக் காணப்படாத நிலையில், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளபோது அவரை விடுதலை செய்ய வலியுறுத்துவது எந்த வகையில் நியாயமானது ஹனீபா மதனி அவர்களே? உங்கள் மனட்சாட்சியைத் தொட்டுக் கூறுங்கள்.

மேலும், குறித்த கடிதத்தில் ‘மானிடப் பிறவிகள் எவராகிலும் துறவிகள் உட்பட அனைவரும் தவறுக்கும் மறதிக்கும் இடையில் படைக்கப்பட்டவர்கள். இந்த வகையிலேயே ஞானசரர் தேரர் நீதிமன்றத்தை அவமதித்த விடயத்தையும் பார்க்க வேண்டும் என்று’ நீங்கள் கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் சட்டம், நீதித்துறை ஒன்றுமே தேவையில்லையே? அனைவரும் மனிதப் பிறவிகள்தான் தவறுகள் செய்வார்கள் எனக் கூறவிட்டு விடுவித்து விடலாமே? அவ்வாறு செய்தால் குற்றங்கள் அதிகரிக்கமாட்டாதா? நீதித்துறையில் பாரபட்ச நிலைமை தோன்றாதா? சமயங்கள் கூட இதனை விரும்புகின்றனவா? எனவே, உங்களது கருத்துகள் மிகப் பிழையானதும் பாரதூரமானதும் ஹனீபா மதன அவர்களே!
இவ்வாறானதொரு கருத்தை நீங்கள் இந்த நாட்டில் வெளியிட்டதால் அது வெறும் பேசு பொருளாகவும் விமர்சனத்துக்கு உரிய ஒன்றாகவுமே உள்ளது. ஆனால், சவூதி போன்ற நாடுகளில் இவ்வாறு நீங்கள் தெரிவித்திருந்தால் அந்நாட்டுச் சட்டங்கள் இன்று உங்களை எங்கு வைத்திருக்கும் என்பதனை மதீனாவில் கற்ற உங்களுக்கு நான் சொல்லத் தேவை இல்லை.

மேலும், ஜனாதிபதிக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தில் ‘கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டுக்காக பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும் போர் வீரர்களின் நல உரிமைக்காக முன்னிற்பதாகவும் இனங்களின் மத்தியில் பொதுஇணக்கப்பாட்டை ஏற்படுத்தப் பாடுபட்டதகாகவும் அநேகரும் கூறுவது போன்று எல்லோராலும் அவர் அறியப்பட்டவர்’ என்ற உங்களது கருத்தையே ‘அநேகரும்’ என்ற சொல்லின் ஊடாக மற்றவர்களின் தலையில் போட்டுள்ளீர்கள்.

சரி மற்றவர்கள் கூறுவது போன்றுதான் என்று வைத்துக் கொண்டாலும்

1.நாட்டுக்காக அவர் செய்த பல தியாகங்கள் எவை?

2.இனங்களின் மத்தியில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதனை நீங்கள் சற்று விளக்கமாகக் கூற முடியுமா?

இந்த நாட்டு முஸ்லிம்களை வைராக்கியத்துடன் நோக்கி, ஒட்டுமொத்த சிங்கள மக்களின் மத்தியில் எம்மை எதிரிகளாகவே காட்டி அநியாயங்களைச் செய்த ஒருவரை நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவர் என்றும் இனங்கள் மத்தியில் பொது இணக்கப்பாட்டை அவர் ஏற்படுத்தியதாகவும் மற்றவர்கள் கூறுவதனை (கூறுகிறார்களோ தெரியாது) நீங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், எமது ஏக இறைவனையும் அவனது புனித அல்குர் ஆனையும் அவமதித்து, நிந்தித்த ஒருவரை மன்னித்து விடுவிக்கப் பரிந்துரைப்பது நியாயமா?
ஆக, முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் தொடர்பில் மற்றவர்களின் நியாயப்படுத்தலில் உங்களால் எவ்வாறு நியாயம் காண முடியும் என்பதனை விளக்கமாக கூறுங்கள் ஹனீபா மதனி அவர்களே!

கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டுக்காகப் பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும் போர் வீரர்களின் நல உரிமைக்காக முன்னிற்பதாகவும் இனங்களின் மத்தியில் பொதுஇணக்கப்பாட்டை ஏற்படுத்தப் பாடுபட்டதகாகவும் அநேகரும் கூறுவது போன்று எல்லேராலும் அவர் அறியப்பட்டவர்’ என நீங்கள் கூறுகிறீர்களே.
ஆனால், அதே ஞானசார தேரர் கடந்த பொதுத் தேர்தலில் பௌத்த மக்கள் கட்சி ஒன்றின் ஊடாக தனது சகாக்களை நாட்டின் 16 மாவட்டங்களில் களமிறக்கியும் அவர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் வெறும் 20,377 என்பதனையும் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் மவாட்டங்களில் ஒன்றான களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஞானசாரர் தேரரே வெறும் 5,727 வாக்குகளைப் பெற்று அவரது இனத்தினாலே தோற்கடிக்கச் செய்யப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்தானே?
அளுத்கமையிலும் பேருவளையிலும் முஸ்லிம் மக்களுக்கு அவர் செய்ததாகக் கூறப்படும் அநியாயங்களை அந்த மாவட்ட சிங்கள மக்கள் அனைவரும் சரி எனக் கண்டிருப்பின் தேர்தலில் இவ்வாறான பலத்த அடியை அவருக்கு எவ்வாறு கொடுப்பார்கள் ஹனீபா மதனி அவர்களே!

மேலும், அவரையும் அவரது கட்சியையும் இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ‘தங்களின் மீட்பர்கள்’ என ஏற்றுக் கொண்டிருந்தால் அவரது கட்சி இந்த நாட்டின் 16 மாவட்டங்களில் வெறும் 20,377 வாக்குகளைப் பெற்று செல்லாக் காசாக்கப்பட்டிருக்காதே?
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகளையும் ஏனைய நடவடிக்கைகளையும் இந்த நாட்டில் வாழும் இனவாதமற்ற பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தமைக்கான ஒரு தீர்ப்பாகவே கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கும் அவரது கட்சிக்கும் அளித்த வாக்குகளை நீங்கள் நோக்க வேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் ஹனீபா மதனி அவர்களே!

எனவே, உட்காயங்களுக்கு வெளியே மருந்து போட்டு பெண்டஜ் (Bandage) கட்டினால் ஆற்றி விடலாம் என நீங்கள் நினைப்பதனை நான் தவறென நினைப்பது உங்கள் பார்வையில் எனது தவறா ஹனீபா மதனி அவர்களே?

கழிவுத் தேயிலையில் கலர் கலந்து விற்பனை செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள் அன்புக்குரிய எனது ஹனீபா மதனி அவர்களே!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -