போதை பொருள் விற்பனையாளர்களின் பிரதானஇலக்குகளாக பிள்ளைகள், மாணவர்கள் உள்ளனர்

விழிப்பூட்டல் பேரணியில் டாக்டர் ரமேஸ் எச்சரிக்கை
எஸ்.அஷ்ரப்கான்-
போதை பொருள் விற்பனையாளர்களின் பிரதான இலக்குகளாக பிள்ளைகளும், மாணவர்களும் உள்ளனர் என்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி என். ரமேஸ் தெரிவித்தார்.
போதை பொருளை ஒழிப்போம், புதிய யுகத்தை படைப்போம் என்கிற மகுடத்திலான விழிப்பூட்டல் பேரணி கல்முனை தமிழ் பிரதேச செயலகம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையம் ஆகியவற்றின் பங்கேற்புடனும் பங்களிப்புடனும் வெகுசிறப்பாக அண்மையில் நடத்தப்பட்டது. போதை பொருள் அரக்கனின் சவப்பெட்டி ஊர்வலத்துடன் போதை பொருள் பாவனைக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் இருந்து பேரணி புறப்பட்டு பிரதான வீதியூடாக பயணித்து நிறைவாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

இங்கு உரையாற்றியபோது டாக்டர் ரமேஸ் தெரிவித்தவை வருமாறு:-

மிகவும் முக்கியமான கால கட்டத்தில் இந்த மாபெரும் விழிப்பூட்டல் பேரணி எமது பகுதியில் நடத்தப்பட்டு உள்ளது. பெண்கள் அமைப்புகள் முன்னின்று இதை நடத்தி உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் பல கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருள் பிடிபடுவதை ஊடகங்கள் மூலமாக நாம் அறிந்த வண்ணம் இருக்கின்றோம். ஆனால் இவ்விதம் பிடிக்கப்படுபவற்றை தவிர பிடிக்கப்படாத போதை பொருட்கள் எமது பகுதிகளில் ஏராளமாக நடமாடுகின்றன என்கிற உண்மையையும் நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

போதை பொருள் விற்பனையாளர்களின் பிரதான இலக்குகளாக பிள்ளைகளும், மாணவர்களும் உள்ளனர். எனவே இவர்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதற்கு இவ்வாறான விழிப்பூட்டல் நிகழ்வுகளை மாத்திரம் நடத்துவது பயன் தர மாட்டாது. பெண்கள், தாய்மார் முக்கியமாக இவ்விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். உங்கள் பிள்ளைகளை அவதானத்துடன் கவனித்து கொள்ள வேண்டும். பிள்ளைகளில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள்கூட அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே பிள்ளைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது பக்குவமாக கையாளுங்கள்.

பிள்ளைகள் போதைவஸ்துக்கு அடிமையாக மூல காரணம் பெரியவர்களின் நடத்தைகள் ஆகும். ஆகவே பெண்கள், தாய்மார் புகையிலை பழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். போதை பொருளுக்கு முக்கியமாக பிள்ளைகளை இட்டு செல்கின்ற தூண்டல் காரணியாக சிகரெட் பழக்கம் உள்ளது. எனவே புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றாக ஒழிப்பதன் மூலம் சமுதாயத்தை தற்காத்து கொள்ள முடியும். ஆகவே சமூக மட்டத்தில் எல்லோரும் விழிப்புணர்வு அடைந்து போதை பொருளை முற்றாக ஒழிக்க வேண்டும். போதை பொருள் விற்பனையாளர்கள் குறித்து தகவல்கள் அறிந்தால் நமக்கு எதற்கு என்று ஒதுங்கு இருக்காது பொது நல அக்கறையை முன்னிறுத்தியவர்களாக காவல் துறையினருக்கு முறையிட வேண்டும்.ஏனென்றால் இது சமூகத்தை பீடித்து உள்ள பாரிய பிரச்சினை ஆகும்.

பிரதேச செயலாளர்

பிரதம விருந்தினரான கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் இங்கு பேசியபோது தெரிவித்தவை வருமாறு

இந்த நிகழ்வை அர்த்தம் உள்ள, பயன் உடைய நிகழ்வாக மாற்றிய இதில் பங்கேற்ற அனைவருக்கும் நான் நன்றி உடையவனாக உள்ளேன்.காலத்தின் தேவையாக கருதப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டு உள்ளது.வானிலை எமக்கு குறுக்கீடாக இருந்தபோதும் மழையானாலும், புயலானாலும் இந்த நிகழ்வை திட்டமிட்டபடி நடத்துவது என்று நாம் எல்லோருக்கும் எமக்குள் திடசங்கற்பம் பூண்டு இருந்தோம். பேரணியில் பங்கேற்றவர்களில் ஒருவர்கூட குடையுடன் நின்றிருக்கவில்லை. எனக்கு தடிமனாக இருந்தபோதிலும் நானும் குடையை தியாகம் செய்தவனாக பேரணியில் பங்கேற்று நனைந்தேன். குறிப்பாக பெண்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த உணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவரதும் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டு இருப்பது முக்கியமான விடயம் ஆகும். புற்று நோய் போல சமுதாயத்தில் பரவி கொண்டிருக்கின்ற போதை பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு இதை விட வேறு ஒரு விடயத்தை முன்னுதாரணமாக நான் கூற முடியாது. அனைவரும் மனதில் திடசங்கற்பம் பூண்டு போதைபொருளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். போதை பொருள் பாவனையின் பாதகங்கள், கொடூரங்கள் ஆகியன உறைக்க கூடிய வகையில் வெளிப்படுத்தி காட்டப்பட்டு உள்ளன. மழைதான் இந்த நிகழ்வை மெருகூட்டி இரட்டிப்பு வெற்றியை தந்து உள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகம் வரைக்கும் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்றால் மிகை அல்ல. பல செய்திகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. எனவே எமது எண்ணம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் மாற்றம் இல்லை.
இவ்வாறான விழிப்புணர்வுகள் பெரிதாக பிரயோசனப்படுவதில்லை என்றும் இது தேவை இல்லாத வேலைகள் என்றும் வீணாக மழையில் நனைகின்றார்கள் என்றும் சிலர் அவர்களுக்குள் பேசியது எனது காதுகளில் விழுந்தது. ஆனால் அது அப்படி அல்ல. ஏனென்றால் எதையும் செய்யாமல் இருப்பதை காட்டிலும் ஏதோ ஒன்றை செய்வது பயனுடைய காரியமே ஆகும். நாம் ஆரேனும் ஒரு மனிதனின் இதயத்தை கடுகளவிலேனும் வெற்றி கொண்டிருந்தால்கூட அது நிச்சயம் எமக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகத்தான் இருக்கும்.இங்கு வந்து உள்ள ஒவ்வொருவரும் போதை பொருளுக்கு எதிரான செயற்பாட்டாளர்களாக தொடர்ந்து இயங்குவதன் மூலம் போதை பொருள் பாவனை அற்ற சமுதாயத்தை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதே போல சட்ட ரீதியான, சட்ட ரீதியற்ற போதை பொருள் பாவனையை மேற்கொள்பவர்கள் எவராவது இங்கு இருந்தாலும் இன்றுடன் அதை நிறுத்தி கொள்ள பற்றுறுதி எடுத்து கொள்ள வேண்டும். இவையே நான் உங்கள் முன்னிலையில் வைக்கின்ற கோரிக்கைகள் ஆகும். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -