- சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
ஐ. ஏ. காதிர் கான்-இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை சிறப்புற வாழ்த்துவதோடு, இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சுபிட்சம் நிறைந்த சாந்தி, சமாதானம், செளபாக்கியம் நிலவிட வாழ்த்துவதாக, தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
எமது நாடு சுதந்திரம் அடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே தமது பங்களிப்புக்களைச் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை அடைந்து, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டது. இதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளை, இன்று நாம் நினைவு கூர வேண்டியது எமது அனைவரினதும்
கடமையாகும்.
நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை, அர்த்தமுள்ளதாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு இன, மத, கட்சி, நிற பேதங்களையும் தாண்டி, "ஒரே நாட்டு மக்கள்" என்றவாறு அபிமானத்துடன், அமைதியாக, ஒற்றுமையாகச் செயற்படுவது, இன்றைய கால கட்டத்தில் நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
சுதந்திர இலங்கையின் பிரஜையாக இருப்பதை, நாம் அனைவரும் பெருமையாகக் கொள்வதைப்போல், எமது இலங்கை தாய் நாட்டையும் நாம் அனைவரும் நேசிக்க வேண்டும். இந்த நாட்டின்மீது பற்றுள்ளவர்களாகவும், இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும் எங்களை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.
நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திர தினத்தை, அதனைப் பெற்றுக் கொடுத்தவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும். இதற்கு நாம் பாடுபட வேண்டும். சுதந்திரத்தின் சுவாசக் காற்றை அனைவரும் சுவாசிக்கின்ற வகையில் அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவும் அனைவரும் முன்வர வேண்டும். மனித கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் உருவாகுவதன் மூலமே, சுதந்திரம் பூரணத்துவம் அடைகின்றது.