ஸ்ரீ ஜயவர்தனபுர - கோட்டே பிரதேசத்திற்குள் முஸ்லிம் மையவாடி ஒன்றுக்கான கட்டாயத்தேவை இருப்பதால், அதற்கான இடம் ஒன்றினை ஒதுக்கித் தருமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டே மாநகர சபை உறுப்பினர் அலி உதுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநகர சபையின் அமர்வு, கடந்தவாரம் இடம்பெற்றபோதே அவர் இக் கோரிக்கையை முன் வைத்தார். உறுப்பினர் அலி உதுமான் தொடர்ந்தும் இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போது,
ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர எல்லைக்குள் இரண்டு ஜும்ஆப் பள்ளிவாசல்களும், மூன்று அஹதிய்யாப் பாடசாலைகளும் உள்ளன. இங்கு 25000 ற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், மையவாடி ஒன்றின் அவசியம், எமது முஸ்லிம் மக்களின் மிக நீண்டகாலத் தேவையாக உள்ளது.
முஸ்லிம் மக்கள் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, தூரப் பிரதேசங்களிலுள்ள மையவாடிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு்ள்னர்.
இதனால், முஸ்லிம் மக்கள் பாரிய செலவுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இதற்காக நாம் பல்வேறு தரப்பினர்களிடமும் உதவிகள் கேட்டோம். ஆனால், எவ்விதப் பயன்களும் அளிக்கவில்லை. "முஸ்லிம்களுக்கு மையவாடி அமைத்துத் தருகின்றோம்" என்று தேர்தல் காலத்தில் வாக்குகளைக் கேட்டு வருபவர்கள், வெற்றியின் பின் அதனை அடியோடே மறந்து விடுகின்றனர்.
இதற்கு முன்னர் இங்கு பதவிகளை வகித்த மேயர்களிடம், இது தொடர்பாக கோரிக்கைகளை விடுத்து பல கடிதங்களைக் கையளித்தோம். ஆனால், அவர்கள் கடிதங்களைப் பெற்று வாக்குறுதிகளைத் தந்தாலும், அது இது காலவரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை.
எனவே, முஸ்லிம் மக்களுக்காக எமது மாநகர நிர்வாக எல்லைக்குள் உள்ள ஏதாவது பிரதேசம் ஒன்றில், முஸ்லிம் மையவாடி ஒன்றை அமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பெரும் எதிர்பார்ப்புடன் மாநகர மேயர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையிலும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.